மனித உரிமை கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளர் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடக்குமுறை சட்டங்களினால் பெற முடியாது என தெரிவித்த கருத்தானது இலங்கையில் தொடர்ந்தும் அடக்குமுறை சட்டங்கள் நடைமுறையில் உள்ளமையை எடுத்துக்காட்டுவதாக மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பிய அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் மீதான அநீதி
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இலங்கையில் புதிய பெயரில் தொடரும் பயங்கரவாத தடை சட்டம் மற்றும் இணைய சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சட்டங்கள், அதிகரிக்கும் ஆயுதப்படையினரின் அதிகாரங்கள் மற்றும் வறுமை நிலை அதிகரிப்பு தொடர்பாக தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்.
15 வருடங்கள் ஆகியும் 10,000க்கு மேற்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பாக எந்த முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை என்றும் காணமால் போனவர்கள் மற்றும் உள்நாட்டு போரில் இறந்தவர்களை நினைவு கூர்பவர்கள் மீது நிகழ்த்தப்படும் அடக்குமுறை பற்றியும் கவலை வெளியிட்டுள்ளார்.
இறுதியாக 2010 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றினால் தனிநபர் மீது சித்திரவதை மேற்கொண்டதனால் குற்றவாளியாக இனம் காணப்பட்ட நபர் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டதை கண்டித்துள்ளதுடன் ஒட்டுமொத்தமாக இலங்கையில் வீழ்ச்சி அடைந்து வரும் மனித உரிமைகள் நிலைமையையும் தொடரும் தமிழர்கள் மீதான அநீதியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
‘கடந்த வருடமும் ஆயுதப்படையினரால் பிரதானமாக வடக்கு கிழக்கு பகுதியில் பாலியல் வன்முறைகள் உட்பட பல வன்முறைகள் இடம்பெற்றன’ என ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளர் கூறுகிறார்.
அத்துடன் ‘நிலையான சமாதானமும் நல்லிணக்கமும் அடக்குமுறை சட்டங்கள் மூலம் பெறப்பட முடியாது’ என அவர் எச்சரித்து உள்ளார்.
ஆனால் தமிழ் தலைவர்கள் என்று கூறிக்கொள்வோர் நாட்டிலும் புலத்திலும் இவைகள் தொடர்பில் வாய்மூடி மௌனிகளாக உள்ளனர்.
உரிமைப் போராட்டம்
முன்பெல்லாம் ஒவ்வொரு வருடமும் ஈழத்தமிழரின் பிரச்சினைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் எடுக்கப்படும் போதெல்லாம் நாட்டிலும் புலத்திலும் வாழும் தமிழ் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஜெனீவா சென்று கோவில் திருவிழா போலப் பல விதமான போராட்டங்களை முன்னெடுப்பார்கள்.
மூன்று தசாப்த உள்நாட்டு போரின் பின்னர் 2009 இல் ஆயுத போராட்டம் மௌனமாக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக தமிழரின் ஒட்டுமொத்த உரிமைப் போராட்டமும் மௌனிக்கப்பட்டது போன்ற ஒரு நிலை தற்போது உருவாகியுள்ளது.
ஒருபுறம் கடந்த காலங்களில் வெளிவேடம் போட்டுகொண்டு புலம்பெயர் தமிழரை தூண்டி பெறப்பட்ட நிதியில் ஜெனீவாவில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த உலகத் தமிழர் பேரவை மற்றும் கனேடிய தமிழ் காங்கிரஸ் உட்பட பல அமைப்புகளின் உண்மை முகம் வெளிப்பட்டு அவர்கள் இப்போது ‘தமிழர் அதிகம் வாழும் வடக்கு கிழக்கு பகுதியில் இருந்து ஆயுதப்படையினரை அகற்ற வேண்டாம்’ என்று கூறும் பௌத்த மத குருக்களுடன் இணைந்து மக்களைத் தெளிவுபடுத்தும் பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகின்றனர்.
மகிந்தவுடன் இணைந்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்பவர்களுக்கு மகிந்தவுக்கு எதிரான இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளைத் தொடர்வது கடினமாக உள்ளது போலும்.
மறுபுறம் தமிழரசு கட்சி மீண்டும் தலைவர் தேர்தலை நடத்தத் தயார் என நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதன் ஊடாகக் கடந்த காலங்களில் யாப்பை மீறி செயல்பட்டு இருப்பதை ஒப்புக்கொண்டிருப்பதுடன் உட்கட்சி குழப்பங்களால் அந்த கட்சி ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளது.
13ஆம் திருத்த சட்டம்
ஆனால் ஏனைய தமிழ் கட்சிகள் மௌனமாக இருப்பதும் இந்திய தூதுவரினால் நடத்தப்படும் உபசாரங்களில் கலந்துகொண்டு ‘13ஆம் திருத்தத்தை தமிழ் மக்கள் சார்பில் இந்தியாவே கொண்டுவந்தது’ என்று கூறும்போது கைதட்டி வருவதும் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இந்த கட்சிகள் முழுமையாக கொண்டுவரப்பட்டு இருப்பதற்கான ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாமோ என எண்ணத் தூண்டுகிறது.
அதாவது ‘ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை இனப்படுகொலை போன்ற விடயங்களை கலந்துரையாடி ரணில் – மோடி கூட்டமைப்பின் திட்டங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த இவர்கள் விரும்பவில்லை’ என்று எடுத்துக் கொள்ளலாம்.
தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் மௌனமாகியுள்ள இந்த நேரத்தில் தமிழ் புத்திஜீவிகளும் சிவில் சமூகமும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்களும் என்ன செய்யப்போகிறார்கள் என்பதிலேயே ஈழத்தில் தமிழர்களின் எதிர்காலம் தங்கியுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post