ஊட்டச்சத்துக்களின் வளமான ஆதாரமாக இருக்கும் காயான பீட்ரூட் மிகசிறந்த ஆரோக்கியமான வேர் காய்கறி (root vegetable) ஆக பார்க்கப்படுகின்றது. இந்த காய் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
நாம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முறையான உணவுப் பழக்கவழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
அந்த வகையில் பீட்ரூட் ஒரு சூப்பர் உணவாக மருத்துவர்களாலும் பரிந்துரைக்கப்படுகின்றது. பீட்ரூட் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
ஆரம்ப காலத்தில் பீட்ரூட் தாவரத்தின் இலைகளை மாத்திரமே மனிதர்கள் உணவுக்காக எடுத்துக்கொண்டார்கள். காலப்போக்கில் பீட்ரூட் கிழங்கை சாப்பிடும் வழக்கம் தொடங்கியது.
தினசரி சாப்பிடலாமா?
பீட்ரூட்டில் காணப்படும் பீட்டெயின் எனும் ரசாயனம் மன அழுத்தத்தை குறைக்க உதவுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
மன அழுத்தம் என்பது ஒரு அச்சுறுத்தல் அல்லது சவாலாக தன்னை வெளிப்படுத்தும் ஒரு சூழ்நிலைக்கு உளவியல் மற்றும் உடலியலின் எதிர்வினை ஆகும்.
தற்காலத்தில் உலகளாவிய ரீதியில் மனஅழுத்தம் பாரிய பிரச்சினையாக மாறிவருகின்றது.
தினசரி உணவில் பீட்ரூட்டை சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி உள ஆரோக்கியமும் மேம்படும்.
மனித உடலின் மிக முக்கியமான உறுப்புக்களுள் கல்லீரல் இன்றியமையாதது.இது பழுதுபட்டால் தன்னைத்தானே சரிப்படுத்திக்கொள்ளும் ஆற்றலை கொண்டுள்ளது. கல்லீரல் ஆரோக்கியத்துக்கு பீட்ரூட் பெரிதும் துணைப்புரிகின்றது.
சரும பராமரிப்பிலும் பீட்ரூட் முக்கிய பங்காற்றுகின்றது. பீட்ரூட் கொலாஜன் உற்பத்திக்கு துணைப்புரிவதால் சருமம் என்றும் இளமையாக இருக்கும்.
பீட்ரூட் குறைவான கொழுப்புச்சத்தை கொண்டுள்ளதால் தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக்கொண்டாலும் உடல் ஆரோக்கியத்திற்கு எந்தவித தீங்கையும் ஏற்படுத்தாது.
Discussion about this post