ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் இன்று , வியாழக்கிழமை (15) கைது செய்யப்பட்டதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
தரம் 10 இல் கல்விப்பயிலும் மூன்று மாணவிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரிலேயே ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக வட்டவளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் சந்தன கமகே தெரிவித்தார்.
என்னுடைய யோசனைக்கு இணக்கமா?
சுமார் 5 வருடங்களாக அப் பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராக சேவையாற்றும் ஆசிரியர், மூன்று மாணவிகளிடமும் பாலியல் அழுத்தத்தை பிரயோகித்து குறுஞ்செய்திகள் பலவற்றை அனுப்பியுள்ளார்.
எனினும் குறுஞ்செய்திகளுக்கு பாடசாலை மாணவிகள் மூவரும் பதிலளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியர், மாணவிகள் அமர்ந்திருக்கும் கதிரைகளுக்கு முன்பாக இருக்கும் மேசைகளின் மேல், “என்னுடைய யோசனைக்கு இணக்கமா?” என எழுதியுள்ளார்.
இதனால், பாதிக்கப்பட்ட மாணவிகள் மூவரும் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதனடிப்படையிலேயே விஞ்ஞான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார் என வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விஞ்ஞான பாட ஆசிரியர் 44 வயதானவர் என்றும், அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார் எனத் தெரிவித்த பொலிஸார், ஆசிரியரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
Discussion about this post