இலங்கையின் நுகர்வோர் விலை பணவீக்க விகிதம் டிசம்பரில் 4.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 2.2 வீதமாக வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் டிசம்பரில் உணவுப் பொருட்களின் விலை 1.6 வீதத்தால் அதிகரித்துள்ளமையால் பணவீக்கம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் உணவு அல்லாத பொருட்களின் விலை நவம்பரில் 7.1 சதவீதத்தில் இருந்து டிசம்பரில் 6.3 சதவீதமாக குறைவடைந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் பிணையெடுப்பின் ஆதரவுடன் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பணவீக்கம் குறையத் தொடங்கியது ஆனால் இந்த நிதியம் நிர்ணயித்த வருவாய் இலக்குகளை எதிர்கொள்ள இலங்கை பெறுமதி சேர் வரியை 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தியுள்ளதால் ஜனவரி முதல் பணவீக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும். ஜனவரி இறுதியில் பணவீக்கம் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post