ஜனவரி 2023
உலகில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஜனவரி மாதம் கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 16 கிமீ தொலைவில் உள்ள மான்டெரி பார்க் நகரில் துப்பாக்கிச் சூடு நடந்தது.
ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள இங்கு, ஆயிரக்கணக்கானோர் ஒன்றாகக்கூடி சீன புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருந்தபோது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்ததோடு, பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய 72-வயது முதியவரும் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தச் சம்பவம் பல உலக நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெப்ரவரி 2023
கடந்த பெப்ரவரி மாதம் 6-ம் திகதி துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாடுகளை உலுக்கிப் போட்டன.
இது ரிக்டர் அளவில் 7.8 மற்றும் 7.5 எனப் பதிவானது. இந்த நிலநடுக்கம் தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகைப்படங்கள் வெளியாகி மக்களை பதைபதைக்க வைத்தன.
1000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அங்கு இந்த நிலநடுக்கத்தால் சேதம் அடைந்தன.
நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
அதேபோல் அங்கு தொலைத்தொடர்பு சேவைகள் முடங்கின. மீட்பு பணிகளில் ராணுவம் களமிறங்கி இரவும், பகலுமாய் மக்களை மீட்டன.
இதையொட்டி துருக்கியில் 50,000-க்கும் மேற்பட்டோரும், சிரியாவில் 8,000 பேரும் இறந்ததாகக் கூறப்படுகிறது.
மார்ச் 2023
அகாடமி விருது எனப்படும் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் கடந்த மார்ச் மாதம் 12-ம் திகதி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார்.
இந்த விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது டேனியல் குவான், டேனியல் ஸ்கீனெர்ட் இயக்கத்தில் வெளியான ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ (Everything Everywhere all at once) திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ (The Elephant Whisperers) ஆவண குறும்படத்தின் இயக்குனர் கார்திகி குன்செல்வெஸ் மற்றும் தயாரிப்பாளர் குனெட் மொன்கோ வென்றனர்.
இந்த படம் தமிழகத்தில் படமாக்கப்பட்டிருந்தது.
சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை, ராஜமவுளி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் வென்றது. இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
ஏப்ரல் 2023
கடந்த ஏப்ரல் 20-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, மக்கள் தொகையில் முதல் இடத்தில் உள்ள சீனாவை இந்தியா மிஞ்சியது.
உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடானது இந்தியா.
ஐநாவின் உலக மக்கள்தொகை கணக்கின்டி சீனா 142.57 கோடி மக்கள்தொகையுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியா 142.86 கோடி மக்கள் தொகையுடன் முதல் இடத்திலும் உள்ளது.
அதேபோல் ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டுப் போர் ஆப்பிரிக்காவை ஆட்டிப்படைத்தது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடான், நீண்டகால ஆட்சியாளரான ஒமர் அல்-பஷீர் அகற்றப்பட்டதில் இருந்து பெரும் பிரச்சனையை சந்தித்தது.
ஏப்ரல் மாதம் உள்நாட்டுப் போரில் சின்னாபின்னமானது. கருத்து வேறுபாடு காரணமாக ராணுவ தளபதி பர்ஹான் ஆதரவு படையினருக்கும் – துணை ராணுவ தலைவர் டக்லோ ஆதரவு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதுவே உள்நாட்டு போராக மாறியது. இதில் சுமார் 9000 பேர் கொல்லப்பட்டனர்.
மே 2023
இங்கிலாந்தை 70 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த ராணி 2-ம் எலிசபெத், கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் திகதி தன்னுடைய 96 வயதில் காலமானார்.
அதற்குப் பிறகு, ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்தின் மன்னரானார்.
அவர் 3-ம் சார்லஸ் என்று அழைக்கப்படுகிறார்.
ராணியின் மறைவுக்குப் பின்னர் மன்னராக சார்லஸ் அரியணை ஏறியபோதும், அவருக்கான அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமலேயே இருந்து வந்தது.
இந்த சூழலில் மே 6-ம்தேதி மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூவமாக அறிவித்தது.
70 ஆண்டுகள் கழித்து மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி ஒட்டுமொத்த இங்கிலாந்தும் விழாக்கோலம் பூண்டது.
ஜூன் 2023
கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் 18-ம் திகதி கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்தார். கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.
மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேற ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டார்.
இதற்கு எதிர்வினையாக இந்திய அரசு, இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதரக அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது.
இதனாலேயே கனடாவுக்கு இந்தியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து தற்போது சுமூக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நீர்மூழ்கிக் கப்பல் மூலம் டைட்டானிக் கப்பலை காண சுற்றுலாப் பயணிகள் செல்வது இன்றளவும் தொடர்ந்து நடந்துவருகின்றன.
இந்தச் சூழலில், ஜூன் அன்று டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை காண கனடாவில் இருந்து கடலுக்குள் சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயமானது.
கனடா, அமெரிக்க கடலோர காவல்படையினர் மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் இரவுப்பகலாக ஈடுபட்டனர்.
ஆனால் நீர்மூழ்கி கப்பல் வெடித்துச் சிதறியதில் அதில் பயணித்த 5 கோடீஸ்வரர்களும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்தது.
ஜூலை 2023
உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் அக்டோபர் 27-ம் திகதி 2022 அன்று ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார்.
அதன்பிறகு 2023-ல் அந்நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்கவும், கருத்து சுதந்திரத்தை மேம்படுத்தவும் பல அதிரடி முயற்சிகளை மேற்கொண்டார்.
அதன் பிறகு ஜூலை 2023-இல், மஸ்க் ட்விட்டரை ’எக்ஸ் -X’ என்று பெயர் மாற்றம் செய்தார். அதோடு அதன் லோகோவையும் மாற்றினார்.
அதன் தொடர்ச்சியாக பல உயர்மட்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்தார். தலைமை நிர்வாக செயல் அதிகாரியை மாற்றினார்.
ஆகஸ்ட் 2023
இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் திகதி நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
நிலவின் தென் துருவ பகுதி அருகே கால் பதித்த முதல் நாடு இந்தியா.
அமெரிக்கா, சீனா மற்றும் முந்தைய சோவியத் யூனியனுக்குப் பின்னால் நிலவை அடைந்த நான்காவது நாடு இதுவாகும்.
இது உலகளவில் விண்வெளி ஆய்வில் சமநிலையை மறுவடிவமைக்கும் இந்தியாவின் திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 2023
ஜி20 கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய திகதிளில் நடைபெற்றது.
இந்தியாவில் முதன்முறையாக ஜி20 மாநாடு நடைபெற்றது.
அந்த மாநாட்டில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் உட்பட ஜி20 கூட்டமைப்பின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவின் ஜி20 ஆலோசனைக் கூட்டங்களில் முதன்முறையாக பல முக்கிய தலைப்புகள் முன்னிறுத்தப்பட்டன. உலகத் தலைவர்களே மெச்சும் அளவுக்கு இந்த மாநாடு நடைபெற்றது.
இது மாதிரியான நடவடிக்கைகள் இந்தியாவை மேலும் வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
அக்டோபர் 2023
கடந்த அக்டோபர் 7-ம் திகதி பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் படையினர் இஸ்ரேலிய நகரங்கள் மீது தாக்குதல்களை நடத்தினர். இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.
200 க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் படையினர் பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்தது இஸ்ரேல்.
இந்த போரில் இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காசா நகரம் உருக்குலைந்துள்ளது. 2.3 மில்லியன் மக்களை இடம்பெயர்ந்துள்ளது.
போர் நிறுத்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக ஹமாஸால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட 100 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் போர் இன்னும் முடிந்தபாடில்லை.பிரபலமான சிட்காம் பிரண்டஸ் சீரிஸ் மூலம் பிரபலமான, மேத்யூ பெர்ரி காலமானார் .
அவருக்கு வயது 54 உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அவரது திடீர் மரணத்தை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.
நவம்பர் 2023
காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவும் ஐ.நா சார்பில் காலநிலை மாநாடு நடத்தப்படுகிறது.
COP28 எனும் பருவநிலை மாற்றம் குறித்த 2-வது உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்றது.
நவம்பர் 30-ஆம் திகதி முதல் டிசம்பர் 12-ம் திகதி வரை இந்த மாநாடு நடைபெற்றது.
இதில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், அமைப்புகள் கலந்து கொண்டனர்.
புவி வெப்ப நிலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கை எட்டுவது குறித்து ஆராய்வதை இந்த உச்சி மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 11 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் சாதனை படைத்தது.
இருப்பினும், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியை சந்தித்தது. உலக கோப்பையை தட்டிச்சென்றது அவுஸ்திரேலியா.
டிசம்பர் 2023
டிசம்பர் 12 அன்று காசாவில் உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. தீர்மானம் கொண்டுவந்தது.
ஆனால் அதற்கெல்லாம் இஸ்ரேல் செவிசாய்க்கவில்லை. பின்னர் ஒரு வழியாக தற்காலிக போர் நிறுத்தம் சாத்தியமானது.
இஸ்ரேலும், ஹமாஸ் படையும் தாங்கள் பிடித்து வைத்திருக்கும் பணய கைதிகளை விடுக்க ஒப்புக்கொண்டன.
செக் குடியரசின் தலைநகர் ப்ராக் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில், 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், 25 பேர் காயமடைந்தனர்.
நவீன செக் குடியரசு நாட்டின் வரலாற்றில் பதிவான, மிகவும் மோசமான துப்பாக்கி சூடுகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட டேவிட் கோசாக், உயிரிழந்ததாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட டேவிட் கோசாக் அவர் சொந்த ஊரான ஹோஸ்டவுன் பகுதியில் உள்ள வீட்டில், அவரது தந்தையையும் சுட்டுக்கொன்றார்.
Discussion about this post