ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தின் வலி சுமந்து 19 ஆண்டுகள் கடந்துவிட்டன.
ஈழப்போராட்டத்திலும் ஆழிப்பேரலை ஆதிக்கம் செலுத்திச் சென்றது. ஆழிப் பேரலையின் அகோரம் ஈழத்தமிழர்களுக்கு அதீத இழப்புக்களை ஏற்படுத்திச் சென்றது.
ஈழப்போராட்ட முன்னெடுப்புக்களை அது காலம் தாழ்த்திப்போக செய்துவிட்டது. ஈழக்கவிஞர்களையும் ஆழிப்பேரலை பற்றி பாடல்களை புனையச்செய்ததும் நோக்கத்தக்கது.
முல்லைத்தீவின் கரையோர மக்களில் அதிகமானோர் கிறிஸ்தவ மக்கள். அவர்கள் தங்கள் நத்தார் பண்டிகையின் இயேசு பாலனின் பிறப்பின் முதற்சூரிய உதயத்தை அன்று கண்டனர்.
காலை பூசைக்காக தேவாலயங்களில் கூடியிருந்தனர். ஏனைய மக்கள் தங்கள் வழமையான வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
திடீரென கடல் நீர் உள்வருவதை கண்டு பயந்து ஓடினோம் என அன்றைய நாளில் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் இயந்திரத் திருத்துனர் ஒருவர்.
விரைவாக முல்லைத்தீவு நகரை விட்டு வெளியேறி திருகோணமலை வீதியின் வழியே செம்மலை நோக்கிச்சென்று எதிர்ப்பட்ட எல்லோருக்கும் கடல் உள்வருவதைச் சொல்லிக்கொண்டு சென்றேன். அதிகமான மக்களுக்கு தகவலை சொல்லிவிட்டேன் என்ற மனத்திருப்தி இன்றும் தனக்கிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அன்று நான் இந்தளவு அழிவை இது ஏற்படுத்தும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என ஆழிப்பேரலை ஏற்படுத்திய இழப்புக்களை எண்ணி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தன்னுடைய பல நண்பர்களை அந்த ஆழிப்பேரலை கொண்டு போய்விட்டது என கண்கலங்க தெரிவித்துள்ளார்.
காலையில் பேருந்தில் தன் மகள் முல்லைத்தீவு உண்ணாப்பிலவு வைத்தியசாலைக்கு சென்றிருந்தாள். கடல் உள்ளே வந்தது என்று சொன்ன போது அவள் என்னபாடோ என்று எனக்கு ஒரே பதற்றம்.
எங்கள் ஊரில் இருந்த மக்கள் எல்லாம் முள்ளியவளை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.நானும் அவர்களோடு சென்றேன். என்னால் முல்லைத்தீவுக்கு போக முடியவில்லை. விரைவாக செயற்பட்டிருந்த வைத்தியசாலையினர் என் மகளையும் முள்ளியவளை கூட்டி வந்திருந்தனர். அவளை நான் முள்ளியவளை வித்தியானந்த கல்லூரியில் வைத்து கண்டுகொண்டேன். அங்கு தான் சுனாமியில் இறந்தவர்களையும் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டுவந்தவர்களையும் வைத்திருந்தனர். மகளை கண்ட பின் தான் நான் ஆறுதலானேன் என ஒரு வயதான அம்மா தன் நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
சுனாமி என்ற ஆழிப்பேரலை
2004 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் சுமத்ரா தீவிற்கு அண்மையில் உள்ள கடல் பகுதியில் அதிகாலை வேளையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 9.1 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் 14 நாடுகளை பாதித்திருந்தது.
சுனாமி என்பது ஜப்பான் மொழிச்சொல்லாகும். ஜப்பானில் துறைமுகங்களை தாக்கி சேதப்படுத்தும் கடல் அலைகள் சுனாமி என அழைக்கப்படும். துறைமுக அலை, ஆழிப்பேரலை என தமிழில் அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் கடற்கரைகளை காலை 8.50 மணியளவில் சுனாமி தாக்கியது. நீண்ட தூரம் பயணித்து வந்த நீரலைகள் கரையைத் தாக்கியது. எதிர்பார்க்கப்படாத ஒரு நிகழ்வாகவே அன்று இருந்தது.
இந்த அனர்த்தத்தினால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளவும் எந்த முன்னெச்சரிக்கையும் இன்றியே ஈழத்தமிழர்கள் அன்று இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறிய நேரத்தில் முல்லைத்தீவு நகரத்தின் கோலம் மாறிப்போயிருந்தது. நகரமெங்கும் சுனாமியால் சாய்க்கப்பட்ட மரங்களும், உடைக்கப்பட்ட கட்டடங்களும் நிறைந்து கிடந்தன. இடையிடையே கடல் நீர் பொங்கி வந்து நிலத்தை மூடிக்கொண்டு விடும்.பத்து அடி உயரத்துக்கு நீர் எழும்பிய இடங்கள் கூட இருக்கு.
கறுப்பான எண்ணெய் தன்மையோடு கடல் நீர் இருந்தது. ஓடிவரும் போது தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்டேன்.தப்பிப்பதற்கு முயன்றேன். மரமொன்றினை இறுகப்பிடித்துக் கொண்டதால் அன்றைய சூழலிலிருந்து தப்பிக்க முடிந்ததாக முல்லைத்தீவில் சுனாமியில் சிக்கிப்பிழைத்திருந்தவர் தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
சுனாமியினால் இறந்தவர்
இறந்தவர்கள் முள்ளியவளை கயட்டைக்காட்டிலும், புதுக்குடியிருப்பு ஐயனார் கோவிலுக்கு அண்மையிலும் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
முள்ளியவளையில் “சுனாமி நினைவிடம் முள்ளியவளை” என பெயரிடப்பட்டு நினைவாலயம் பராமரிக்கப்படு வருகின்றமையை அவதானிக்கலாம்.
ஆறு நீண்ட குழிகளில் இறந்தவர்களை அடக்கம் செய்துள்ளனர். ஒரு குழியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை ஒரேயடியாக வைத்து அடக்கம் செய்ய நேரிட்டதாக கூறுகின்றார்.
அன்றைய நாளில் இறந்தவர்களை இனம் காண்பதிலும் உடல்களை அடக்கம் செய்வதிலும் பங்கெடுத்திருந்த அன்று போராளியாகவும், இன்று முன்னாள் போராளியாகவும் இருக்கின்றவர். சிலர் தங்கள் உறவினர்களின் உடல்களை தங்களுக்கான மயானங்களில் தங்கள் சமய முறைப்படி அடக்கம் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய அடக்கம் செய்யப்பட்டு கல்லறைகள் கட்டப்பட்டு அதன் மீது அவர்களது புகைப்படங்களோடு பெயர்கள் பொறித்து சுனாமியில் இறந்தவர்கள் என்பதை அறியும் பொருட்டு வாசகங்களையும் பொறித்துள்ளமையை மாமூலை,கள்ளப்பாடு சவுக்காலைகளில் காணலாம்.
ஒவ்வொரு சுனாமி நாளன்றும் நினைவு நிகழ்வுகள் நடைபெறுவது வழமையான ஒரு செயற்பாடாக முல்லைத்தீவு மக்களிடம் இருக்கின்றது.
முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம்
முல்லைத்தீவு நகரில் கடற்கரையில் பீட்டர் தேவாலயம் உள்ளது. சுனாமியினால் இந்த தேவாலயத்தின் முன்வளைவும் மணிக்கோபுரமும் சேதமடையவில்லை. தேவாலயத்தின் ஏனைய பகுதிகள் இடிந்துபோய்விட்டன.
பங்குத்தந்தைகளின் முயற்சியால் தனவந்தர்களின் அர்ப்பணிப்பால் அந்த ஆலயம் மீளவும் கட்டப்பட்டு சுனாமி நினைவாலயமாக பேணப்பட்டு வருகின்றதாக முல்லைத்தீவு கடற்கரையோர மக்கள் குறிப்பிடுகின்றனர்.
பங்காற்றியவர்களின் பெயர் விபரங்கள் தாங்கிய தூண்களும் அந்த நினைவாலயத்தில் இருப்பதை அவதானிக்கலாம். பீட்டர் தேவாலயத்தில் உள்ள தாங்கு தூண்களில் இறந்தவர்களின் பெயர்களை அவர்களின் வாழிடத்தை குறிப்பிட்டு நேர்த்தியான முறையில் பதிவு செய்து வைத்துள்ளமையை அவதானிக்கலாம்.
இந்த முயற்சியினால் சுனாமியில் இறந்து உடல் எடுக்க முடியாத தன் தங்கையை நினைவு கொள்ளும் ஒரு இடமாக இந்த நினைவாலயத்திற்கு வந்து போவதாக புதுக்குடியிருப்பில் தற்போது வசித்து வரும் அண்ணா தன் தங்கையின் நினைவு நாள் பற்றி கூறியிருந்தார்.
பீட்டர் ஆலயத்தின் பங்குத் தந்தையாக இருந்து பின்னாளில் நோயினால் இறந்த ஜேம்ஸ் பாதரின் சிலையும் பீட்டர் தேவாலயத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகளின் படையணிகளின் செயற்பாடுகள்
முல்லைத்தீவு சுனாமியின் போது மீட்புப்பணியிலும், சுனாமியின் பின்னர் முல்லைத்தீவு நகரை இயல்புக்கு மீட்டெடுக்கும் முயற்சியிலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் படையணிகள் ஈடுபட்டதாக கூறுகின்றனர்.
அந்த பணிகளில் ஈடுபட்டிருந்த முன்னாள் போராளிகள் சிலர். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி,ஜெயந்தன் படையணி, புலனாய்வு படையணி, கடற்புலி படையணி என்பன கூட்டிணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்ததாக கடற்புலி முன்னாள் போராளி ஒருவர் குறிப்பிட்டார்.
கடற்புலிகளின் சிறப்புத்தளபதியாக இருந்த சூசை அண்ணா நேரடியாக அந்த மீட்புப்பணியை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தியிருந்தார் என மேலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதன்போது விரைவான மீட்புப் பணிக்காக மக்களும், போராளிகளும் இணைந்து செயற்பட்டிருந்தமையை அவர்களுடன் உரையாடும்போது அறிந்துகொள்ள முடிந்தது.
சுனாமி தாக்கியபோது பொழுது முல்லைத்தீவு நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திலுள்ள ஒரு பகுதியாக இருந்தது என்பதை நோக்க வேண்டும்.
விழித்துக்கொள்ளாத குழந்தை
தற்போது உள்ள முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திற்கும் முல்லைத்தீவு நகரின் மத்தியில் உள்ள வட்டப்பாதைக்கும் இடையில் உள்ள பாதையில் இடுப்பளவுக்கு கடல் நீர் குறுக்கறுத்து பாய்ந்தவாறு இருந்தது.
நீரில் சிக்குண்டவர்களை மீட்டெடுக்கும் பணியில் சுனாமி தாக்கிய நாளில் காலை முதல் மூன்று நாட்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரை கண்டு கதைக்க முடிந்தது.
நகரின் மத்தியில் இருந்து மக்களை நீருக்குள்ளால் அழைத்து வந்து மருத்துவர்களிடமும் மீட்டெடுத்தோரை பாதுகாப்பாக கொண்டு செல்ல நின்றவர்களிடமும் கொண்டு போய்ச்சேர்க்க வேண்டியது தங்கள் பொறுப்பாக இருந்தது.
ஆண் போராளிகளும், பெண் போராளிகளும் பொது மக்களுமாக பலர் இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தோம். கடல் நீரால் அலைக்கழிக்கப்பட்டிருந்த பலர் சோர்ந்து போயிருந்தனர்.பாதையில் வழி மாறாமல் இருப்பதற்காக கயிறு கட்டப்பட்டிருந்தது.
அந்த கயிற்றை அடையாளமாக வைத்துக்கொண்டு மக்களை தாங்கியவாறு நடக்க வேண்டும். அப்படி நடக்கும் போது ஒருவரை ஒருவர் தாங்கி நடப்பார்கள். பாதை மாறி விடவே நீருக்குள் சறுக்கி சிலர் விழுந்து விடுவார்கள். தம்மோடு வருபவர்களை கரை கொண்டுபோய் விட்டு திரும்பி வந்து விழுந்தவர்களைப் பார்த்தால் அவர்களில் பலர் இறந்திருப்பார்கள்.
உடல்களை மீட்டெடுத்து கொண்டு செல்ல வேண்டும். சிலரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. வாங்கும் போது உயிரோடு இருக்கும் குழந்தைகளை 500 மீற்றர் தூரம் தூக்கிச்செல்ல வேண்டும். வைத்தியர்களிடம் கொண்டு சேர்க்கும் போது பலர் இறந்திருப்பார்கள் என தன் அன்றைய நாள் அனுபவங்களை பகிர்ந்தார்.
அப்படி வாங்கிய ஒரு கிராம சேவகரின் மகள் அப்போது கைக்குழந்தை. தடித்த துணியால் அணைக்கப்பட்டு அவளது தந்தை வைத்திருந்தார். நீருக்குள்ளால் அவர்களை அழைத்துச்செல்லும் போது குழந்தையை தான் வாங்கிக்கொள்ள கிராம சேவகரான தந்தை தன்னில் சாய்ந்து கொண்டு நடந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
வாங்கும் போதும் சரி கரையேறி கொடுக்கும் போதும் சரி அந்த குழந்தை நித்திரையில் இருந்து எழுந்து கொள்ளவில்லை என ஆச்சரியப்பட்டதோடு அந்த சுனாமியின் கோரத்தில் சிக்கி வலி சுமந்த போதும் அந்த வலியிலும் குழந்தையை அரவணைத்து வைத்திருந்த அந்த தந்தையை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது என்று வியந்திருந்தார்.
வலி தந்த சுனாமி
சுனாமியை அடுத்து மூன்று நாட்களும் மேலாக அந்த நிலத்தை தூய்மைப்படுத்த வேண்டியிருந்தது. இறந்தவர்களது உடல்களை தேடி எடுத்துக்க வேண்டும். தேடி எடுத்த இறந்திருந்த பலரின் தலைமுடிகள் வேலிக் கம்பியில் சிக்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது.
கடற்கரையோர கிணறுகளை தூக்கி மண் மீது போட்டிருந்தது. மலசல கூடங்கள் இருந்த இடத்திலிருந்து தூர அப்படியே சேதமில்லாது நகர்த்தியிருந்தது.
Discussion about this post