ஜப்பானில் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச ஜூடோ போட்டியில் பங்கேற்கவிருந்த பாடசாலை மாணவர் ஒருவரை சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர் குழுவினர் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவன் கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கம்பளை விக்கிரமபாகு தேசிய பாடசாலையில் தரம் 10 இல் கல்வி பயிலும் தாஹம் இந்துவர என்ற மாணவனே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இப் பாடசாலையில் 10ஆம் ஆண்டில் நான்கு பிரிவுகள் உள்ளன. இதில் ஏ மற்றும் சி பிரிவு மாணவர்கள் இணைந்தே மேற்படி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
மேற்குறிப்பிட்ட பிரிவுகளுக்கு இடையே நீண்ட காலமாக முரண்பாடு நிலவி வந்த பொழுதும் அதனை விசாரித்து தீர்த்து வைக்க பாடசாலை நிர்வாகம் தவறியுள்ளதாக மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில், தன்னை தாக்கிய மாணவர்கள் பாடசாலைக்குள் வைத்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டதோடு உன்னை வெளியில் வைத்து பார்த்துகொள்கின்றேன் என்று கூறியே நேற்று முன்தினம் (05) மாலை கம்பளை நகரத்தில் வைத்து தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி சம்பவம் குறித்து பாடசாலை நிர்வாகத்திடம் தொடர்பு கொள்ள முயன்றபோதும் பலனளிக்கவில்லை.
மேற்படி சம்பவம் குறித்து ஹெட்காலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செனரத் கெகுலந்த தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post