வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (24) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோணிக்கல் பகுதியில் கடந்த யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன், மனைவி ஆகிய இருவர் உயிரிழந்திருந்தனர்.
குறித்த இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இதன்போது, மேலும் மூன்று சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்டமையினால் அவர்களைக் கைதுசெய்ய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
குறித்த மூவரும் தலைமறைவாக இருந்ததால் அவர்களது கடவுச் சீட்டுகள் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைதுசெய்வதற்கான பகிரங்க பிடியாணை உத்தரவு கடந்த செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி வவுனியா நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் சந்தேக நபர்களில் ஒருவர், ஹொரவப்பொத்தானை பகுதியில் மறைந்திருந்த நிலையில் அவரைக் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
Discussion about this post