பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கிடையிலான 2026 ஆம் ஆண்டு காற்பந்து உலகக்கோப்பைக்கான தகுதிகாண் போட்டியில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை பதிவு செய்தது.
போட்டியின் 63 ஆவது நிமிடத்தில் நிக்கோலஸ் ஓட்டமெண்டி தனது தலையை உபயோகித்து அடித்த கோலால் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதுடன் பிரேசில் அணிக்கு முதல்தடவையாக தகுதிகாண் போட்டிகளில் தொடர்ச்சியான 3ஆவது தோல்வியை அளித்தது.
போட்டியின் தொடக்கத்தில் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்ட போது பிரேசில் ரசிகர்களுக்கும் அர்ஜென்டினா ரசிகர்களுக்கும் இடையில் மோதல் ஆரம்பித்து வன்முறையாக மாறியது.
வன்முறையை அடக்க அரங்கத்தை நோக்கி நகர்ந்த பிரேசிலிய பொலிஸார், அர்ஜென்டினா ஆதரவாளர்களுடன் கடுமையான அணுகுமுறையை பிரயோகிக்க, அது லியோனல் மெஸ்ஸியையும் அவரது அணியினரையும் கோபப்படுத்தியது.
வன்முறை நடக்கும் இடத்துக்கு சென்ற மெஸ்ஸி மற்றும் அவரது அணியினர், பொலிஸ் மற்றும் அர்ஜென்டினா ஆதரவாளர்களிடம் அமைதிக்கான வேண்டுகோளை விடுத்தனர்.
தொடர்ந்தும் அரங்கேறிய வன்முறையின் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் கோல்கீப்பர் எமி மார்டினெஸ் அரங்கில் ஏறி, பொலிஸ் அதிகாரியின் கையை பிடித்து இழுத்து அர்ஜென்டினா ரசிகர் ஒருவர் மீதான தாக்குதலை தடுத்தார்.
சிறிதுநேரத்தில், வன்முறை ஓரளவு கட்டுப்படுத்தப்பட, மெஸ்ஸி தனது அணியினரை அழைத்துக்கொண்டு ஆடுகளத்திலிருந்து உடைமாற்றும் அறைக்கு சென்றார்.
போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மெஸ்ஸி,
“போட்டியின் ஆரம்பத்தில் பொலிஸார் அர்ஜென்டினா ரசிகர்களை தாக்கிய விதம் மிக மோசமாக இருந்தது. ரசிகர்களுடன் ஒப்பிடுகையில் போட்டி எங்களுக்கு இரண்டாம் பட்சமே என தெரிவித்துள்ளார்.
Discussion about this post