எதிர்வரும் 13.11.2023 பிற்பகல் முதல் 18.11.2023 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.
இவ்வாண்டுக்கான வடகீழ் பருவ மழை தொடர்பில் அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இவ்வாண்டுக்கான வடகீழ் பருவ மழையின் முதல் சுற்று நேற்றுடன் (10) முடிவுக்கு வருகின்றது.
இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மழையற்ற வானிலை தொடங்குகின்றது ( எனினும் சில பகுதிகள் சிறிய அளவிலான மழையைப் பெறும்).
முதலாவது தாழமுக்கம்
எதிர்வரும் 13.11.2023 வரை இந்நிலை தொடரும். இவ்வாண்டுக்கான வடகீழ் பருவத்தின் முதலாவது தாழமுக்கம் எதிர்வரும் 13.11.2023 திகதியளவில் வங்காள விரிகுடாவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே எதிர்வரும் 13.11.2023 பிற்பகல் முதல் 18.11.2023 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக 14, 15, 16 நவம்பர் 2023 திகதிகளில் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை முதல் மிகக் கனமழை வரை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
Discussion about this post