கலகெதர மாவட்ட நீதிமன்றில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்த சந்தேக நபர் ஒருவர் தடுப்புக்காவல் அறையில் இருந்து வெளியே வந்து இளம் பெண் சட்டத்தரணி ஒருவரை கட்டியணைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்தேக நபரின் மூர்க்கத்தனமாக அணைப்பினால் பெண் சட்டத்தரணியின் கழுத்து நெரிபட்டு, பாதிக்கப்பட்ட நிலையில் சிகிற்சையில் உள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 16ஆம் திகதி பிற்பகல் கலகெதர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர், 17ஆம் திகதி கஞ்சா வைத்திருந்த மற்றும் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கலகெதர நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விசாரணையின் பின்னர் சந்தேநபரை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற கூண்டிலிருந்து இறக்கப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்திலிருந்த தடுப்பு காவல் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அந்த காவலில் இருந்து மற்றொரு சந்தேக நபர் ஒருவர் மற்றுமொரு விசாரணைக்காக வெளியே அழைக்கப்பட்ட போது, தண்டனை வழங்கப்பட்ட கைதி, இரும்புக் கதவைத் தள்ளிக் கொண்டு வெளியே பாய்ந்துள்ளார்.
அப்போது அந்த பகுதிக்கு வந்த இளம் பெண் சட்டத்தரணியை திடீரென கட்டியணைத்த நிலையில், சந்தேக நபரின் இரும்புப் பிடியில் இருந்து இளம் பெண் சட்டத்தரணியை விடுவிக்க பொலிஸார் மற்றும் சட்டத்தரணிகள் கடும் பிரயத்தனப்பட்டனர்.
சந்தேகநபரின் மூர்க்கத்தனமான கட்டியணைப்பினால், காயமடைந்த சட்டத்தரணி கலகெதர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சந்தேகநபரிடம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் , எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, சந்தேகநபர் நீதிமன்றத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் சட்டத்தரணியைப் பார்த்ததாகவும், அவரது அழகில் மயங்கி மோகம் கொண்டதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அவரது அழகில் மயங்கியே , அவரை கட்டியணைத்ததாகவும், சற்றே ஆவேசமாக அணைத்து விட்டதால் சட்டத்தரணியின் கழுத்து நெரிக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்.
கலகெதர களுவானே பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர், போதைக்கு அடிமையாகி கைதாகிய இந்த நபர், ஏற்கனவே அப்பகுதியில் உள்ள பல யுவதிகளுக்கு துன்புறுத்தல்களை ஏற்படுத்தி வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அதுமட்டுமல்லாது , பெண்களை கண்டவுடனேயே கட்டியணைத்து விடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக கல்கெதர பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post