சீனாவில் இருந்து வரவிருந்த ஷின் யான்-6 கப்பலின் வருகைக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை அங்கீகாரம் வழங்கவில்லை இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கைக்கு கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவிலிருந்து ஷின் யான் 1, 3, 6, சியாங் யாங் ஹாங் 1, 3, 6, 18, 19, யுவான் வாங்க் 5 ஆகிய உளவு மற்றும் போர்க் கப்பல்கள் வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஒகஸ்ட் மாதமளவில் ஹய் யாங் 24 ஹவோ என்ற சீன போர்க் கப்பலை இலங்கை அரசு இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கொழும்பு துறைமுகத்தில் 2 நாட்கள் நங்கூரமிட அனுமதி வழங்கியிருந்தது.
கப்பல் வருகைக்கான காரணம்
இந்நிலையில் சீன கப்பலான ஷின் யான்-6 இலங்கைக்கு வர உள்ளதாகவும், இந்த கப்பல் 17 நாட்கள் இலங்கை கடற் பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இலங்கையின் ருஹுனு பல்கலைகழக நீரியியல் துறை கடல் சார்ந்த ஆய்வினை மேற்கொள்ள குறித்த கப்பலின் உதவி தேவைப்படுகின்றமை குறித்த கப்பல் வருகைக்கான காரணமாக கூறப்பட்டது.
அதேவேளை குறித்த கப்பல் மூலம் இலங்கையிலிருந்து சீன உளவு மற்றும் போர்க் கப்பல்களின் மூலம் கடற்பரப்பிலிருந்து 750கி.மீ. தூரம் வரையிலான இடங்களைக் கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது.
இந்தியா கடும் எதிர்ப்பு
இதற்கமைய, இலங்கைக்கு மிக அருகில் உள்ள இந்தியாவின் ஸ்ரீ ஹரி கோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் இந்தியாவின் தென் மாநிலங்களில் அமைந்திருக்கும் 6 கடற்படைத் தளங்களை இந்தக் கப்பல் மூலம் உளவு பார்க்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தே சீன கப்பல்களின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், இலங்கை அரசு குறித்த சீன கப்பலின் வருகைக்கு இதுவரையில் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து சுமார் 474 கடல் மைல் தொலைவில் குறித்த சீன கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனுமதி மறுப்பு
மேலும், ஆராய்சிகளை மேற்கொள்ள இருந்த ருஹுனு பல்கலைக்கழக பேராசிரியர்களில் ஒருவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் மற்றொரு பேராசிரியர் பதவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் ருஹுனு பல்கலைக்கழகம் இந்த ஆய்வுக்கான ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமையவே இலங்கை அரசு சீன கப்பலுக்கான அனுமதியை மறுத்துள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Discussion about this post