பிள்ளையான் என அறியப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை காப்பாற்றிய தமிழன் சேனல் 04வின் கருத்தில் எதுவித தவறும் இல்லை. குற்றச்சாட்டை முன்வைத்துள்ளவர் ஆசாத் மௌலானா. அதனை ஔிபரப்பியதுடன் சேனல் -04வின் வேலை முடிந்துவிட்டது.
ஏனெனில் உலகளவில் பேசப்பட்ட ஒரு விடயத்தின் மறுபக்கம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகும் நிலையில் அதற்கு இடமளிப்பது ஊடக அறமாகும். அதனை சேனல் 04 செய்துள்ளது.
சுரேஷ் சலே-சஹ்ரான் சந்திப்புக்கு தங்களிடம் ஆதாரமில்லை என்று சேனல் -04 சொல்லிவிட்டதற்காக அப்படியொரு சந்திப்பு நடைபெறவே இல்லை என்று யாரும் வாதிட்டுவிட முடியாது. ஏனெனில் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள அசாத் மௌலானா குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பொய்யான குற்றச்சாட்டொன்றை முன்வைக்கும் பட்சத்தில் அதற்கான பின்விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை அவர் அறியாதவர் இல்லை. ஆக அவரது சாட்சியம் நிரூபிக்கப்படுவதற்கான சுதந்திர விசாரணை நடத்தப்படும் வரை அல்லது அதனை மறுப்பதற்கான உரிய ஆதாரங்களை குற்றம் சாட்டப்பட்ட தரப்பு முன்வைக்கும் வரை அசாத் மௌலானாவின் தற்போதைய சாட்சியத்தில் உண்மை இருப்பதாகவே நம்ப வேண்டியுள்ளது.
ஏனெனில் பிள்ளையானை விடுவிப்பதற்காக முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா மறுத்த நிலையில் தற்போதைய தமிழர் ஒருவரை சட்ட மா அதிபர் பதவிக்கு வரும் வரை குறித்த செயற்பாடு தாமதித்ததாகவும், தற்போதைய சட்ட மா அதிபர் நீதித்துறையில் தலையீடு மேற்கொண்டதன் காரணமாகவே பிள்ளையான் விடுவிக்கப்பட்டதாகவும் இன்னொரு குற்றச்சாட்டை அசாத் மௌலானா குறிப்பிட்டிருந்தார்.
குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதிபதியின் தீர்ப்பை மாற்றி எழுதுமாறு சட்ட மா அதிபர் தனக்கு உத்தரவிட்டதாக குறிப்பிட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக இருந்த சரவணராஜா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மேலோட்டமாகப் பார்க்கும் எவரும் அசாத் மௌலானா முன்வைத்துள்ள பிள்ளையான் விடுதலை தொடர்பான குற்றச்சாட்டிலும் இதே வகையான அழுத்தம் பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்பதை ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளவே செய்வார்கள்.
இன்னொரு விடயம் யாதெனில் ஒரு சந்திப்பு தொடர்பான போட்டோ, வீடியோ ஆதாரங்கள் ஒரு செய்தியை பிரசுரிக்கும் போது ஊடகங்களைப் பொறுத்தவரை தேவையற்ற விடயமாகும்.
அதற்குப் பதில் நம்பகமான ஒரு சாட்சி இருக்கும் பட்சத்தில் அவ்வாறானதொரு சந்திப்பு குறித்த செய்தியை ஊடகங்கள் ஏற்றுக் கொள்ளவே செய்யும்.
அரசியல் தொடர்பான சந்திப்புகளில் பெரும்பாலும் புகைப்படம் அல்லது காணொளிகள் கிடைப்பதில்லை. ஆனால் நம்பகமான தகவல் மூலாதாரம் கிடைத்தால் அந்த செய்திகளை ஊடகங்கள் பிரசுரிப்பது வழமை. அதற்காக அந்த செய்தியை பொய் என்று யாரும் மறுத்துவிட முடியாது. இதுதான் ஊடக செய்திகளின் அடிப்படையாகும்.
இவ்வாறான நிலையில் சுரேஷ் சலே-சஹ்ரான் சந்திப்பில் பங்கு கொள்ளாத சேனல் -04 , குறித்த சந்திப்பு தொடர்பான ஆதாரம் தங்களிடம் இல்லை என்று கூறுவதைத் தான் ஊடக தர்மம் என்று குறிப்பிட முடியும்.
அதே நேரம் குறித்த சந்திப்பை தான் ஏற்பாடு செய்ததாக, அந்த இடத்தில் தான் நின்றதாக அசாத் மௌலானா குறிப்பிடும் விடயம் பொய் என்று நிரூபிக்கப்படும் வரை அதனை உண்மை என்று ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி கிடையாது
Discussion about this post