செப்டெம்பர் 27ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த 51 வயதுடைய நபரொருவரின் சடலம் களனி ஆற்றங்கரையில் இருந்து வியாழக்கிழமை (செப்.28) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
டி.ஜி பிரதீபா என அடையாளம் காணப்பட்ட இறந்தவர், தலை துண்டிக்கப்பட்டு உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
இறந்தவரின் உறவினர்கள் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிரதீபாவின் மகள் புதன்கிழமை (செப். 27) தனது தாய் காணாமல் போனதாக முல்லேரியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
விசாரணையின் போது கிடைத்த சிசிரிவி காட்சிகளில், இறந்தவர் 55 வயதுடைய சந்தேக நபரை, கடுவெல நகரில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வெளியே சந்தித்ததாகவும், அதனைத் தொடர்ந்து KI 3030 என்ற இலக்கத் தகடு கொண்ட அவரது காரில் இருவரும் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சியமபலபே பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் சுதீர வசந்த என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், இறந்தவருடன் 20 வருடங்களுக்கும் மேலாக நெருக்கமாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் சியாமபலபேயில் கைவிடப்பட்ட வீட்டில் இரத்தக் கறைகள், முடிகள் மற்றும் பெண்களின் ஆடைகளின் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பணம் தொடர்பான பிரச்சினையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரின் வசிப்பிடத்திலிருந்து சுமார் ஒரு மீற்றர் தொலைவில் களனி ஆற்றின் கரையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபருக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை இலங்கை பொலிஸார் கோரியுள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சபுகஸ்கந்த மற்றும் முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post