தியாகி திலீபனின் உருவப்படத்தை சுமந்து வந்த வாகன பேரணி மீதும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது இலங்கையின் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட ஒன்று என அந்த கட்சியின் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்தார்.
திருகோணமலையில் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து ஒருவன் செய்தி பிரிவுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் எதற்காக பாதுகாப்பு இன்றி குறித்த பேரணியில் கலந்துகொண்டார் என எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கினார்.
“தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும் பாதுகாப்பை ஏற்பதில்லை.
குறிப்பாக இலங்கை அரசாங்கத்தின் எம்.எஸ்.டி, பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்பை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை, ஏற்றுக்கொள்ளப்போவதும் இல்லை.
தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பை மேற்கொண்ட இலங்கை பாதுகாப்பு படையினரை எங்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் பயன்படுத்தியதில்லை.
இதனிடையே, தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வாகனத்தை பழுது பார்க்காமல் அவ்வாறே யாழ்ப்பாணம் வரையில் பொது மக்களின் பார்வைக்காக கொண்டுச் செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த வாகனம் பயன்படுத்த முடியாத அளவிற்கு தாக்கப்பட்டுள்ளதாக” அவர் மேலும் தெரிவித்தார்.
Discussion about this post