தங்காலை குடாவெல்ல பகுதியில் ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஸ்கீபர் நிமேஷ் ரங்க சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவமானது, போதைப் பொருள் கடத்தல் கும்பல் ஒன்றின் ஒப்பந்தந்துக்கு அமைய நடைப் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
அதன்படி குறித்த கொலையின் போது துப்பாக்கிதாரியாக செயற்பட்ட கடற்படை வீரர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புல்மோட்டை ரன்வலி கடற்படை முகாமில் சேவையற்றும் பலபிட்டிய பகுதியைச் சேர்ந்த இந்த கடற்படை வீரர், விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த போது மேலதிக வேலையாக கூலிக்கு இந்தக் கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுவரையிலான விசாரணைகளில், வெளிநாட்டில் உள்ள போதைப் பொருள் கடத்தல்காரர் ஒருவரின் தேவைக்காக இக்கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தென்னிலங்கையின் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரராக கருதப்படும் ரத்கம விதுர என்பவரின் நெருங்கிய சகாவான தில்ஷான் என்பவர் ஊடாக இந்தக் கொலை ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ள ரி 56 ரக துப்பாக்கி, கொலை நடந்த கடந்த 15 ஆம் திகதிக்கு முன்னர் கடற்படை வீரருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் வெகன் ஆர் கார் ஒன்றில் பலபிட்டியவிலிருந்து தங்காலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள துப்பாக்கிதாரியான கடற்படை வீரர், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கொலை நடந்த இடத்தை அடைந்துள்ளதுடன் அதற்காக முச்சக்கர வண்டி ஒன்று வழிகாட்டியாக செயற்பட்டுள்ளது.
அந்த முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொலையின் பின்னர் ஒப்பந்தம் கொடுத்த தில்ஷான் என்பவர் மீண்டும் துப்பாக்கிதாரியை தொடர்புகொண்டு பலபிட்டி பகுதியில் மின் கம்பம் ஒன்றின் அருகே துப்பாக்கியை வைத்துவிட்டு செல்ல ஆலோசனை வழங்கியதாகவும் அதன்படி கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை அவ்விடத்தில் வைத்துவிட்டு சென்றதாக கைது செய்யப்பட்டுள்ள கடற்படை வீரர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
கொலைக்காக பேசப்பட்ட கூலி இன்னும் தனக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென் கடல் ஊடாக நாட்டுக்குள் கடத்தப்படும் போதைப் பொருள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்குவதாக சந்தேகித்து கடந்த 15 ஆம் திகதி ஆழ்கடல் ஸ்கீபரான நிமேஷ் ரங்க கொலைச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நம்புகின்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post