கொஞ்சநாளாய் சிலரின் பகிடிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
அதுவும் சிறிலங்காவின் நாடாளுமன்றத்திலும் அதனைச் சார்ந்தவர்களின் பகிடி என்பதும் பகிடி மழையில் நனையத்தயாரா என்பதுபோல இருந்துகொண்டிருக்க,
நான் என்ன சளைத்தவனா ? எனக்கும் பகிடிவிடத்தெரியும் என்றாற்போல பல்லுப் போன கிழவன் போல கொஞ்சநாள் படுத்துக்கிடந்த மேர்வின் சில்வா இப்போது கொக்கரிக்க ஆரம்பித்திருக்கிறார்.
இது எப்படியென்றால் பிள்ளையில்லா வீட்டில் கிழவன் துள்ளி விளையாடினானாம் என்பது போலத்தான் அவர் சொல்லியிருக்கிறார்.
நான் வடக்கு, கிழக்குக்கு வருவேன், நீங்கள் விகாரைகளை தடுக்க முற்பட்டால், மகா சங்கத்தினர் மீது கை வைக்க முயன்றால் நான் களனிக்கு சும்மா திரும்பி வரமாட்டேன், உங்களின் தலைகளை கையில் சுமந்து கொண்டுதான் களனிக்கு வருவேன்.” என்று சொல்லியிருக்கிறார்.
ஆக அவருக்கு கடந்த கால வரலாறுகளோ அல்லது வடக்கில் உள்ளவர்களைப்பற்றியோ மறந்துபோயிருக்க வாய்ப்பிருக்கிறது.
ஏனென்றால் இவர் மன நலம் சரியில்லாதவர் என்று சக அரசியல்வாதிகளே அடிக்கடி சொல்லியிருக்கிறார்கள். அப்படி மனநலம் சரியில்லாதவரின் கருத்துக்களை பற்றி நாம் அதிகம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை.
ஆனால் அதற்காக இந்த நாட்டு இனவாதிகள் தமிழர்கள் யார்? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? என்பதை மறந்துவிடக்கூடாது என்பதை மட்டும் வலியுறுத்திக்கொள்ளலாம்.
சரி யாரிந்த மேர்வின் சில்வா? ஏன் இப்படி மனநலம் பாதிக்கப்பட்டவர்? என்ற கேள்விகளுக்கு கடந்த கால சில சம்பவங்களை சொல்லுகிறோம் நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
முன்னர் ஒரு காலத்தில் அடாவடி அமைச்சர் என்றே அனைவராலும் அழைக்கப்பட்டார். இப்படி ஒருநாள் ஊடக நிறுவனமொன்றிற்குள் புகுந்த இவர் அங்கு தாக்குதல் நடாத்தி சர்ச்சைக்குள்ளானவர்.
அதுமட்டுமல்ல, இன்னொரு நாள் கடமைக்குச் சென்ற அரச ஊழியரை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய மாமேதை வேறு,
அடிக்கடி மனநலம் குன்றியவர் என்ற கருத்தை தானே நிரூபிக்கும் வகையில் நடந்துகொள்ளும் இந்த சண்டியர் ஒருதடவை முன்னேஸ்வரம் ஆலயத்திற்குள் புகுந்து வேள்வி வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்துருந்தார்.
குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமென்றால் சரத் வீரசேகர போன்ற இனவாதிகளுக்கு இவர்தான் ஒரு காலத்தில் குருவாக இருந்திருப்பாரோ என்னவோ….
அது இருக்க இவரின் கோமாளித்தனம் சர்வதேச அளவில் கூட இலங்கைக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறது அது என்ன தெரியுமா?
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அப்போது ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நாயகமாக இருந்த நவநீதம் பிள்ளை அம்மையார் இலங்கை வந்திருந்தபோது, அவருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று கீழ்மட்டமான தனது புத்தியை வெளிப்படுத்தி பலத்த விமர்சனத்தை பெற்றுக் கொண்டார்.
கடைசியில் அது மேர்வின் சில்வாவின் தனிப்பட்ட கருத்து எனக்கூறி அப்போதைய ராஜபக்ச அரசு மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலைக்கு, தனக்கு பதவி வழங்கி அழகு பார்த்த அரசாங்கத்தையே அழைத்துச்சென்று விட்ட மகா புனிதர் இவர்.
இப்படியாக அங்குமிங்கும் ஆடித்திருந்த இவர் 2015 ராஜபக்ச அரசின் அஸ்தமனத்தின் பின் தேர்தலில் போட்டியிட யாரும் இடம்கொடுக்காததால் அடக்கமாக இருந்தவருக்கு இப்போது மீண்டும் அரசியல் ஆசை துளிர்விட, அதற்கு காலம் காலமாக சிங்கள அரசியல் தலைமைகள் காலங்காலமாக கைக்கொண்டுவரும் இனவாத கருத்தாடல்களையே இவரும் கைக்கொண்டிருக்கிறார்
Hewa Koparage Mervyn Silva என்ற பழைய கிறிஸ்தவ சிங்களவர் இவர் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இப்போது எமது சமூகம் இருக்கும் நிலையில் மேர்வின் சில்வாவை அழைத்து நம் தலைகளை வெட்டிக்கொடுத்து அனுப்பவும் வடக்கு கிழக்கில் சிங்கள அரச கைக்கூலிகள் இல்லாமலில்லை.
அப்போதைய டக்ளஸ் தொடங்கி இப்போதைய அருண் சித்தார்த் வரை அவரின் இந்தக் கருத்தை தங்கள் தலைகளால் நடந்தெனினும் நிறைவேற்றத் தயாராக இருக்கலாம். தலைகொய்வதும் ஆட்கடத்துவதும் இவர்களுக்கு புதிதில்லை தானே.
ஆனாலும் எது என்னவோ பிள்ளையில்லா வீட்டில் துள்ளித்திரியும் கிழவன் போல என்று நாம் கடந்து போவதே சாலப்பொருந்தும். காலத்துக்கு காலம் மனநோயாளிகளும் சமூகத்தில் பெருகிவருவது அண்மைய பெறுபேறுகளே.
Discussion about this post