இலங்கையானது இந்து சமுத்திர பரப்பிலே மக்கள் அனுபவிக்கக்கூடிய சிறப்பான காலநிலை தன்மைகளினை கொண்டுள்ள அழகிய தீவாக காணப்படுகிறது.
இதேவேளை உலக நீர் நிலைமையுடன் ஒப்பிடுகையில் இலங்கை உயர் நீர் வளம் கொண்ட ஒரு நாடாகும்.
இந்த நிலையில் இன்றைய நிலைமையை பார்க்கும் போது காலநிலை மற்றும் விவசாய, மின் உற்பத்தி மற்றும் மனித நுகர்விற்கு தேவையான நீர்வளம் என்பவற்றில் சிக்கலை நோக்கும் நிலைமை காணப்படுகிறது.
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீர்நிலைகளில் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதுடன் மக்களின் நீர் பாவனையும் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில், “குடிநீர் விநியோகம் குறைவாக உள்ளமையால் அனைவருக்கும் குடிநீருக்காகவும் சுகாதாரத் தேவைகளுக்காகவும் சமமாக நீரை விநியோகிக்க வேண்டும். எனவே, வாகனங்களை கழுவுதல், சிறு வீட்டுத் தோட்டங்களை அமைத்தல் போன்ற அத்தியாவசியமற்ற பணிகளுக்கு நீரை பயன்படுத்துவதை குறைத்து அன்றாட அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்துமாறு” நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக மழை இன்மையால் இலங்கையின் பல மாவட்டங்களில் நீர் நிலைகளில் நீர் மட்டம் முழுமையாக குறைவடைந்துள்ளதுடன் சிறிய குளங்கள் மற்றும் நீரோடைகள் முற்றாக வறண்டு போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கால்நடைகளும் விலங்குகளும் குடிநீர் இன்றி உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும், விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும் பல மாவட்டங்களில் இருந்து வரும் தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.
அதேபோன்று மின்சாரத்தையும் சிக்கனமாக பாவிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 16ஆம் திகதிக்கு பின்னர் தென் மாகாணத்தில் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்
இந்த நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிக வரட்சி நிலவும் நிலையில் புள்ளி விபரங்களின்படி சங்கானை பிரதேச செயலர் பிரிவிலேயே அதிக வரட்சி ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை பகுதி மக்கள் கூறுகையில், எமது பகுதியில் அதிக வரட்சி நிலவுகிறது. இதன் காரணமாக கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களில் புற்கள் இல்லாமல் அழிவடைந்துள்ளன.
இதனால் கால்நடைகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகளில் தண்ணீர் வற்றியதனால் கால்நடைகளுக்கு குடிநீரும் கிடைப்பதில்லை. பயிர்ச்செய்கை நிலங்கள் அதிக வெயில் காரணமாக அழிவடைந்துள்ளன. பயிர்களுக்கு இறைப்பதற்கு கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.
குடிநீருக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த வரட்சி காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நோய் தாக்கங்களுக்கு உள்ளாகின்றனர். அரசாங்கம் மற்றும் உரிய அதிகாரிகள் இதனை ஆய்வு செய்து மக்களுக்கு தேவையானவற்றை, அதாவது நிவாரணங்களையும் இழப்பீடுகளையும் வழங்க வேண்டும் என கோரியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தற்போது அதிக வெயிலுடனான காலநிலை நிலவி வருவதால் வரட்சி நிலமையையும் அவதானிக்க முடிவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதிவுப் பற்றுப் பிரதேசத்தில் நிலவும் வரட்சி காரணமாக நீர் நிலைகள் வற்றியுள்ளதுடன், குழாய் மூலமான குடிநீர் வழங்கப்படாத கிராமப்புறங்களில் மக்கள் குடிநீருக்காக அதிகளவு பிரயத்தனங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெருநிலப்பரப்பிலல் அமைந்துள்ள போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
போரதீவுப் பற்றுப் பிரதேசத்திலுள்ள பெரியபோரதீவு, கோவில்போரதீவு, பொறுகாமம், வெல்லாவெளி, பழுகாமம், உள்ளிட்ட பல இடங்களிலும் அமைந்துள்ள சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளன.
இந்நிலையில் வற்றிய குளங்களில் அப்பகுதி மக்கள் அத்தாங்கு, கரப்பு, வலை, போன்றவற்றைக் கொண்டு பாரம்பரிய முறைப்படி மீன் பிடித்து வருவதோடு, உள்ளிநாட்டு வெளிநாட்டு பறவைகளும் அக்குளங்களில், இரைதேடி வருகின்றன.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடரும் வரட்சி காரணமாக பல்வேறு இடங்களிலும் குடிநீர் நெருக்கடி காணப்படுவதுடன் கால்நடைகளும் குடிநீருக்கு அலையும் நிலை காணப்படுகிறன.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பலப்பெருமாள் குளம், ஆரோக்கியபுரம், அமைதிபுரம், கோட்டைகட்டி, துணுக்காய், ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் நிலவும் வரட்சி காரணமாக குடிநீர் நெருக்கடி காணப்படுகின்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மன்னார் மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக மாவட்டத்தில் சிறுபோக செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகள் உட்பட கால்நடை வளர்ப்பாளர்கள் தோட்ட செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களாக மழை இன்மையால் மன்னார் மாவட்டத்தில் நீர் நிலைகளில் நீரின் அளவு முழுமையாக குறைவடைந்துள்ளது.
குறிப்பாக கடந்த மாதம் மன்னார் மாந்தை பகுதியில் சிறுபோக பயிர் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளின் நெற்செய்கையும் கருகியுள்ளதுடன் கத்தரி, கச்சான் போன்ற தோட்ட செய்கைகளும் முற்றாக பாதிப்படைந்துள்ளது.
அதேநேரம் கால்நடைகளும் விலங்குகளும் குடிநீர் இன்றி இறக்கும் சம்பவங்கள் காணக்கூடியதாக உள்ளது. இன்னும் சில பகுதிகளில் வறட்சி காரணமாக கிணற்று நீரும் வற்றி உள்ளது.
இதேவேளை வவுனியா, திருகோணமலை மாவட்டங்களிலும் இந்த நிலைமையே நீடித்து வருவதாக தெரியவருகிறது.
மழை இல்லாமையால் அதிக வெப்பநிலை காரணமாக நாட்டில் நாளுக்கு நாள் நிலமை மோசமடைந்து வரும் நிலையில் இலங்கை இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க வேண்டுமாக இருந்தால் மழை பெய்வது மாத்திரமே தீர்வாக இருக்கும் என மக்கள் கூறுகின்றனர்.
Discussion about this post