எனது அன்பு நண்பர் எஸ்.ஜீ.சாந்தன். அவர் வாழ்ந்த காலத்திலேயே, அன்பு செய்தேன், மரியாதை செய்தேன், பெருமை கொண்டேன், கௌரவம் செய்தேன். அவர் திறமைக்கு புகழப்படவேண்டும் என அதிகம் ஆசைப்பட்டேன். அவர் புகழுக்காகவும் பாடுபட்டேன். அவர் எம்மூர்கலைஞன் என்பதாலும் நான் அவர் குளுவினன் என்பதிலும்;; கர்வமும் கொண்டேன்.
இணைந்து பணியாற்றிய காலங்களில் மகிழ்ச்சியை எம்மீது அள்ளி விதைத்தவர். பணம், வருமானம், தொழில். என்பதைவிட சாந்தனுடன் இணைந்து பயணிக்கும் அந்த பொழுதுகளில் சாந்தனால் சொல்லப்படும் கதைகள், பகிடிகள். பழைய சம்பவங்களை நகைச் சுவையோடு பரிமாற்றம் செய்யும் விதம் அருமை.
ஒரு சிறிய வாகனத்தில் பாடகர், பாடகி, வாத்தியக் கலைஞர்கள், ஒலி அமைப்பு சாதனங்கள், என்பனவற்றுடன். ஒரு குடும்பமாய் வலம் வந்தோம்.
அந்த நாளில், அவர் குரலினிமையால் ஒலி அமைப்பு செய்யும் அந்த முதல் பாடல் ஒலிபெருக்கியில் அலையாகும் போது அவரை நான் ஒருமுறை பார்ப்பேன். சீர்காழியா… என் சாந்தனா.. என.!…… அவர் கண்களால் என்னை வினாவுவார் ‘எப்படி’ என. நான் என் பரிபாசையில் ‘பிரமாதம்’ சொல்வேன். நிகழ்ச்சி தொடரும்…
சாந்தனின் குரலே ஒரு வாத்தியம் என்பதால்…. ஒரு தவில். (மணியம் அண்ணர்) ஹார்மோனியம், (ந.இராமநாதன்.) அறிவிப்பாளர் (எழுதுமட்டுவாழ் தவம்.) அவர்களின் கையில் ஒரு மறக்காஸ் வாத்தியம், கொஞ்சம் வசதியான நிகழ்வுகளில் தபேலா (மணியம் அண்ணர் -அரச உத்தியோகத்தர்) மற்றும், ஆராதனா ஒலியமைப்பு இவைதான் அன்றைய சாந்தன் இசைக் குழுவாக புகழீட்டியது. (பின் நாளில் என் ஆர்வத்தால் ஒரு யமஹா ஓர்கன்
இணைத்துக் கொண்டோம்.)
17.06.1988 கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் கும்பாபிசேக பெரு நிகழ்வில் பகல் பொழுதிலும் கூட பெரும் தொகை மக்களை தன் குரலால் வசீகரித்து வைத்திருந்ததும், மக்கள் கூட்டத்துடன் போட்டியிட்டு அங்கு நிலை கொண்டிருந்த இந்திய அமைதிப்படை சிப்பாய்களும் சாந்தனின் குரலினிமையில் கட்டுண்டு பண முடிச்சு மாலை அணிவித்ததன் மூலமும் சாந்தனின் குரலை அன்;று அங்கீகரித்தனர்; என்பது பெருமை.
இந்நிகழ்வே நண்பர் சாந்தனுக்கு நான் ஒலி அமைப்பு செய்த முதல் நிகழ்வு. ஆனால், இன்னொரு நாள் காரைநகரில் பகல் திருவிழா இசை நிகழ்வு நடாத்தி விட்டு முரசுமோட்டை இரவு நிகழ்வுக்காக திரும்பிக் கொண்டிருந்த போது சங்கத்தார்வயல் பகுதியில் பாரிய தாக்குதல் ஒன்று இடம் பெற்றிருந்ததால் மாற்று வழியாக கிளாலி ஊடாக வந்தாவது நாம் அடுத்த நிகழ்வை மக்களையும் திருவிழாகாரர்களையும் ஏமாற்றாமல், செய்ய வேண்டும் என்ற உந்துதலில் தென்னந் தோப்பு பாதை வழியாக வந்து கொண்டிருந்த போது, பெருந்தொகையான அதே அமைதிப் படையினரால் சுற்றி வளைக்கப் பட்டோம். (அன்று நாம் சென்ற கரவன் வகை வேன் வாகனமும் பச்சை கலர் என்பதால்) ஏராளம் நவீன ரக துப்பாக்கிகள் எங்களை துளைக்க ஆயத்தமாகிவிட்ட நிலையில், எந்த தெய்வத்தின் கருணையோ. அல்லது சேலை அணிந்தபடி முன் இருக்கையில் அமர்ந்திருந்த அன்புக்குரிய பாடகி திருமதி.ந.சகுந்தலா (திருமதி பார்வதி சிவபாதம் அவர்களின் சகோதரி) அவர்களை பார்த்து, நாம் பொது சனம் என்ற அடையாளத்தாலோ,
அனைவரையும் சைகை மூலம். கைகளை உயர்த்தியபடி கீழிறங்கி அமரும்படி துப்பாக்கிகளின் முனையில் பணிக்கப்பட்டோம். நாம் கிழிறங்கி அமர்ந்த பிறதான் தெரிந்தது…
தென்னைகளுக்குள் மறைவெடுத்து நின்றிருந்த அத்தனை சிப்பாய்களும் வெளிவந்து கண்ணுக் கெட்டிய தூரம்வரை எறும்பு வரிசையாய் கனரக ஆயுத
இந்திய சிப்பாய்கள் அணி.
மேலே தூக்கிய அனைவரின் கைகளும் கும்பிட்டபடி இருந்தோமோ தெரிய வில்லை. ‘திருப்பதி வரை சென்று லட்டு இல்லாமல் திரும்பக் கூடாது. என்பது போல’ அருகில் இருந்த கிளுவம் தடிகள் முறிக்கப்பட்டு அனைவருக்கும் முதுகில் ‘நல்ல’ மொத்துகள் தரப்பட்டது.
எங்களை விட வாகனத்தை செலுத்தி வந்த எங்கள் சாரதியை நிலத்தில் கிடத்தி வைத்து அவருக்கே கிளுவம் கொட்டனால் அதிகம் தாக்கினார்கள்.
எம்மை பணயமாக்கி எம் அருகில் நின்ற சிப்பாய்கள் ஒவ்வொருவரும் தமது பங்குக்கும் அவர்களால் தூக்க முடியாமல் வைத்து நின்ற துப்பாக்கி பின்புறபுடங்கால் எங்கள் தோள்களில் நல்ல திருப்தியான இடிகள் தந்து அவர்களும் திருப்திப்பட்டுக் கொண்டார்கள்.
மரண பயத்தால் அந்த அடிகள் அன்று நோத்தெரியவில்லை. மறு நாள் தொடக்கம் அனைவருமே கொஞ்ச நாள் பரியாரிவீடுதான்.
அன்றைய இரவு முரசுமோட்டை ஆலய நிகழ்வும் வெகு சிறப்பாகத்தான் செய்தோம். ரசித்தவர்களுக்கு இன்று வரை தெரிந்திருக்காது சாந்தன் குழுவினரின் அன்றைய வலி.
மற்றொரு நாள் மாங்குளத்தில் ஆலய நிகழ்வு. அமைதிப்படை காலம். இரவு ஊரடங்கு நேரம். பகல் முழுவதும் நண்பர் சாந்தன் தனது துவிச்சக்கர வண்டி
மூலம் கலைஞர்களை ஒருங்கிணைக்க வழமை போல அவர்கள் நிற்கும் உத்தேச இடமெல்லாம் தேடி, ஓடி அழைத்துவர ஓட்டம். அப்போது கைப்பேசியை கண்ணால்கூட காணாத காலம்.
எல்லா வேலைகளுமே கண், வாய் பேசிதான். ஒருவாறு அவர் இவர் என அனைவரையும் வாகனத்தடிக்கு கொண்டு போய்ச் சேர்க்க. ஊரடங்கு நேரம். ஆறுமணிக்குள். பக்தர்கள், சாத்துப்படி, ஜயர், கடலை வண்டில். ஜஸ்பழம், மேளம், கோஸ்டி, பாட்டுக்காரர் எல்லாரும் கோயில் வளவுக்குள் வந்திர வேணும். பிறகு வந்தால் சூடுதான் என்ற அனுமதியோடதான் மாங்குளம் ஐ.பீ.கே.எவ் அனுமதி. அவசரம் அவசரமாக எமது வாகனம் முறிகண்டி கழிந்து கொக்காவிலில் கிட்ட திடீரென பிறேக் பிடிபட உள் இருந்த நாங்கள் முன்பக்கம் திரும்பிப் பார்த்தோம்.
றைவர் சீற்றுக்கு பக்கத்தில இருந்த சாந்தனின் துணைவியாரை காணவில்லை. முன் கண்ணாடிக்கு கீழே உள்ள பக்குக்குள் இருந்து எழும்பினா. றைவரும்; அவசரமாய் றிவேஸ் போட்டு எடுக்க. நாங்கள் நிமிர்ந்து பார்த்தால் கண்ணாடிக்கு முன்னால் யானை. (கொக்காவில் தனியன் யானை) அவசர பயத்தில் றைவர் றிவேர்சில. வேகத்தில பிரட்டிப் போடுவாரோ எண்ட பயம் பிறகு. முன்னால யானைப் பயம், பின்னால பிரண்டுருவம் எண்ட பயம், சுணங்கிப் போனால் சுட்டுடுவாங்கள் எண்ட பயம். (அண்டைக்கு ஏதாவது நடந்திருந்தால் அந்த ருக்குமணி ஹைஏஸ்க்கு சாந்தன் ஹைஏஸ் எண்ட பேரும் சில வேளை வந்திருக்கும்)….. இப்படி மக்களை மகிழ்விக்கும் கலைஞர்கள் பாடு. இது போன்று. சாந்தன் துன்பத்திலும் பிறரை மகிழ்வித்த சம்பவங்கள் இன்னும் இருக்கு.
எத்தனை பேருக்குத் தெரியும் சாந்தனின் நடிப்பில் இரண்டரை மணி நேர முழுநீள சமூகத் திரைப்படம் ஒன்று உருவாகி சினிமா ரசிகர்களால் ரசித்து பார்க்கப்பட்டது என்பது.? இப்படத்துக்கென நண்பர் சாந்தனின் குரலில் ஐந்து
இனிய பாடல்களை நானே ஒலிப்பதிவு செய்தேன். எஸ்.ஜீ.சாந்தனின் குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட முதலாவது ஒலிப்பதிவும் இதுதான். (புரட்சிப்
பாடல்களுக்கு இதன் ஓரிருவருடத்தின் பின்னர்தான் அழைக்கப்பட்டார்.
‘இந்த மண் எங்களின் சொந்த மண்’.) ‘எதிர்காலம் இருளல்ல’ என்ற சமூகத் திரைப் படம். நா.யோகேந்திரநாதனால், கதை, வசனம், பாடல்கள் எழுதித் தயாரிக்கப்பட்டு வசூலிலும் கணிசமான சாதனை புரியப்பட்டது. இப்படம் தயாரிக்கப்பட்ட காலத்தில் கிளிநொச்சிநகர் வரும் இளைஞர்களை ஐ.பீ.கே.எவ் சந்தேகத்தில் பிடிக்கும், அவர்களோடு நின்றவர்கள் தங்களுக்கு ஆள் சேர்க்க
‘பிள்ளை’ பிடிப்பார்கள், இங்கே வந்து போகிறவர்களை ‘ஊருக்குள்’ விசாரிப்பவர்கள் சந்தேகித்துப் பிடிப்பார்கள். இவ்வளவு சூறாவளி அலைகள் ஊடாக கலை என்ற ஓடம் ஓட்ட ஆசைப்படுபவனே கலைஞன் என்ற கலை மேடை அடைகிறான். அப்படியெல்லாம் கடந்து வந்து, கலைஞன் என்ற வாழ் நாள் விருது பெற்ற மாகலைஞன்தான் என் உயிர் நண்பன் எஸ்.ஐP.சாந்தன்.
எதிர்காலம் இருளல்ல படத்தின் வெற்றியைத் தொடர்ந்து. 1988,89 களில் வேறு தயாரிப்பாளர்களும் இரண்டு சமூகப் படங்களுக்கான பாடல்கள் சிறப்பாக எழுதினார்கள். அந்தப் பாடல்களையும் நண்பர் எஸ்.ஐP.சாந்தனின் இனிய குரலில் நானே ஒலிப்பதிவும் செய்தேன்
ஒரு திரைப்படத்தின் பெயர் ‘அக்கனிப் பிளம்பு’ நான்கு பாடல்கள், மற்றைய நான்கு பாடல்களின் படப் பெயர் நினைவில் இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பு கொண்டு தெரிவித்தால் பதிவிடுவேன். (‘சுழியோட்டம்’ என நினைக்கிறேன்.) இப்பாடல்கள் அனைத்தும் சுயாதீனமானவை. இவை அனைத்தும் என்னிடம் இறுவட்டாக சேமிப்பிலுண்டு.
மேலும் அந்தக் காலங்களில் சாந்தன் நிகழ்த்திய கச்சேரிகளின் ஒலிப்பதிவையும் நான் பொக்கிசமாய் டிஐpட்டல் ஒலித்தட்டாக்கி இன்றும் சேமிப்பிலுள்ளது.
பாதைகளோ வாகனங்களோ சீரற்றிருந்த அந்த யுத்த நெருக்கடி நிறைந்த பொருளாதாரத் தடை எரி பொருள் தடை நிறைந்த காலத்திலேயே சுமார் முப்பதுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு மேல் செய்திருந்தோம்.
80’களிலேயே காதல்ப் பாடல்;, தத்துவப் பாடல், சமூக எழுச்சிப் பாடல், சோகப் பாடல், றீமிக்ஸ் பாடல், டிஸ்கோ பாடல். பிறேக் பாடல். பக்திப் பாடல். என அனைத்து பாடல்களையும் எங்களின் சொந்த வரிகளிலும் மெட்டமைப்பிலும் எனது இல்லக் கலையகத்திலேயே அந்தக் கால குறைந்தளவு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சாந்தன் குரலில் பாடி ஒலிப்பதிவு செய்து பார்த்து விட்டோம். பக்திப் பாடலை, நவபாலகோபாலனும், டிஸ்கோ பாடலை. நானும் எழுதியிருந்தோம். சாந்தனுக்கும் எனக்கும் அதுவும் பயிற்சிக் களமுமாக அமைந்து கொண்டு விட்டது எனலாம்.
பின்நாளில் அன்றைய பிரபல புலிகளின் குரல் வானொலியின் பேட்டி
யொன்றில் கூட என்னைப் பற்றியும் ‘எங்கட விசுவண்ணர்தான் எங்களுக்கு
இத்துறையில் ஊக்கமும் ஒத்தாசையும் தந்து உதவியவர்’ என்று நன்றி மறவாமல் கூறி நன்றி தெரிவித்திருந்தார்.
இலங்கையில் திரைத்துறை முடக்கப்படாமல் இருந்திருந்தால். எங்கள் சாந்தனின் பல பரிமாணங்கள் நிச்சயம் பரிணமித்திருக்கும். வெளியுலகில் பிரகாசித்திருக்கும். நண்பர் எஸ்.ஐP.சாந்தன் சிறந்த நாடகக் கலைஞரும் ஆவார் என எப்போவும் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் நான் அவரின் எந்தவொரு நாடகத்தையும் காணும் வாய்ப்பு கிட்டவே இல்லை. சமூக நாடக காலத்தில் அவருக்கும் எனக்கும் பழக்கமில்லை, அவரது மயான காண்டம் காலத்தில் அவர் என் ஊரில் இல்லை. ஆனால் சான்றோர்கள் பாராட்டக் கேட்டுள்ளேன்.
கலைஞன் என்பவன் மற்றவர் மகிழ்ச்சிக்கு தன்னை திரியாக்குபவன் என்பது நண்பர் எஸ்.ஜீ.சாந்தன் வாழ்க்கையிலும் நிகழ்ந்தது. மக்களின் மனம் குளிர கானம் இசைக்கிறார். தன் மனப் பாரம் ஒளித்து…
ஒரு முறை சற்று தூரத்தே இசை நிகழ்வொன்றை முடித்து காலை அவர்
இல்லம் வந்;;து நாம் சேர்ந்தபோது அவரின் மழலை ஒன்று உயிர் பிரிந்திருந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் கொண்டோம். அவரது ஆருயிர் மழலை நோயுற்றிருந்த போதும், கவலை இருந்த போதும், ஒத்துக் கொண்ட நிகழ்வை தட்டிக் கழிக்க இயலாது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அவமானப் படவோ. ரசிகர்களை ஏமாற்றமடையவோ விட முடியாத கலை.
நண்பர் சாந்தன் எத்தனை மனக் கவலையோடும் அதனை வெளிக் காட்டாது மக்களை, ரசிகர்களை மகிழ்ச்சி கொள்ளும் வகையில், நிகழ்ச்சியை நடாத்திவிட்டுத்தான் வந்துள்ளார்.
ராஐபார்ட் ரங்கதுரை, சிம்லா ஸ்பெசல். போன்றவை படங்களல்ல.
சில கலைஞர்களின் நிஐங்கள் என்பது உடன் அனுபவித்தவர்களுக்கே புரியும் உண்மை…!
இன்னும் இன்னும் நீழும்….! நாளும் தாளும் போதாது,! தொடரலாம்….
அவர் குரலும் புகழும் வாழும்…! அவர் சந்ததி மூலம், இன்னும் பல காலம் நீழும்.!!
வே.காசிவிஸ்வநாதன் ஆராதனா மியூசிக் வேள்ட் கிளிநொச்சி–வவுனியா
0776152346
16.03.2018
26.03.2018 அன்று யாழ் மிலேனியம் றெஸ்ட்.ல் நடைபெற்ற. மாமனிதர்; எஸ்.ஜீ.சாந்தனின் ஓராண்டு நினைவில் ‘காலத்தின் குரல்;’ நினைவுகளை
மீட்கும் காலப் பதிவுக்கென 46.ம் பக்கத்திலிருந்து 52.ம் பக்கம் வரை என்னால் உடன் 16.03.2018.ல் எழுதி வழங்கப்பட்டு பிரசுரமான புத்தகத்தின்
சில துளி நினைவுப் பதிவுகள் மேலே தரப்பட்டவை…..
‘யாழ் திருநெல்வேலி வீதி மிலேனியம் றெஸ்ட்.’ றெஸ்டூறன்ட் குடும்பத்தினர், எங்கள் சாந்தனின் அன்பு ரசிக அபிமானிகள். சாந்தனுக்கெனவும் அவரிடம் வருபவர்களையும் தங்குவதற்கும் உணவு உபசரணைகளையும் மனமுவந்து கட்டணமின்றியும் வழங்கியும் மகிழ்ந்தவர்கள். இந்த உபசரணை ஓரிரு தடவை எனக்கும் கிடைத்தது, அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.!
17.06.1988 அன்று கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேகப் பெரு விழா நிகழ்வில் எனது ஒலி அமைப்பு, பகல் பொழுதில் ஒரு சிறு இசைக் கச்சேரியும் நடைபெற்றது. அன்றுதான் நண்பர் சாந்தனிற்கு ஒலி அமைக்கும் முதல் சந்தர்ப்பம் எனக்கு.
சிலர் மூலம் நம்மூரிலும் ஒரு இளைஞர் நல்ல குரல் வளத்துடன்
இருக்கிறார் எனக் கேள்விப்பட்டிருந்தும். நேரில் கண்டதும், நான் ஒலி அமைத்ததும் அன்றுதான். ஒரு ஆர்மோனியம், மற்றும் தவிலுடன் தன் இனிய குரலால் பல பாடல்களை பாடிக் கொண்டிருந்தார்.
நிகழ்வு முக்கால் திட்டம் நடை பெற்றுக் கொண்டிருந்த போதுதான் எனக்கு ஞாபகம் வர என் வீட்டிற்கு நடந்து சென்று எனது விளம்பர ஒலிப்பதிவுகளுக்கென வாங்கி வைத்திருந்த எக்கோ கருவியை எடுத்து வந்து
இடையில் அதனை பரீட்சார்ததமாக இணைத்து ஒலி அமைப்பைத் தொடர… சாந்தனின் குரலுக்கு மேலும் இனிமை சேர்ந்து அன்றைய நிகழ்வு மேலும் களைகட்டி நீண்ட நேரம் தொடர்ந்து மக்களை வசீகரித்தது.,
நான் மேலே குறிப்பிட்டிருந்தபடி நண்பர் சாந்தனுடனான இசைத் தொடர்பு
இறைவனால் ஏற்பட்டது. அன்றைய கும்பாபிசேக ஆசியுரை வழங்க தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கா தேவி ஆலய தாபகர் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களும், நல்லை ஆதீன குருமுதல்வர் அவர்களும் வந்திருந்தனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் கும்பாபிசேக நிகழ்வின் ஓரிரு நாள் கடந்து, நான் எதிர் பார்த்தது போல சாந்தன் என் வீட்டுக்கு ஒருநாள் வந்தார். தான் பாடும்; நிகழ்ச்சிகளுக்கு எனது எக்கோ கருவியை பாவிக்கத் தரமுடியுமா எனக் கேட்டார்.
நான் எனது எந்தப் பொருளையுமே வேறொருவர் பாவிக்க விடுவதில்லை எனவே, நீங்கள் பாடும் நிகழ்வுகளுக்கு எனது கருவிகளை கொண்டு வந்து நல்ல விதமாக நானே இயக்கித் தருகிறேன் என்றேன். அதற்கு அவர் அந்த அளவிற்கு எமது ஊரில் இன்னமும் கோஸ்டி என்று உருவாக்கி கூலி பெறுமளவிற்கு முடியாது என்று நம்பிக்கையற்று கவலையாகக் கூற, நான்
‘ஏன் முடியாது’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘கோஸ்;டிக்கு உரிய
இன்ஸ்ருமென்ட்ஸ் வாடகைக்கு பெற யாழ்ப்பாணம் சென்று அதை
இயக்குவதற்கு கலைஞர்களையும் கொண்டு வந்து திரும்பவும் கொண்டு சென்று கொடுக்கவென நிறைய செலவாகும் என்றும் அது முடியாது’ என்றும் கவலைப்பட்டார். அவருக்குத் தன்னம்பிக்கையூட்டும் விதமாக, ‘நான்
இன்ஸ்ருமென்ட்ஸ் ஒவ்வொன்றாய் எடுக்கிறேன் எம்மூரில் உள்ள ஆர்வமுள்ள
கலைஞர்கள் பழகட்டும். நாம் கோஸ்டி உருவாக்குவோம்’ என்று.. சொன்னேன். அதன்படியே அடுத்து சாந்தன் ஓர் ஆலய திருவிழாவிற்கு தனது இசைக் கச்சேரிக்கு ஏற்பாடாகி ‘சாந்தன் இசைக் குளு’ என்று பெயரிட்டு கோஸ்டியாக உருவானோம். அதனைத் தொடர்ந்து உள்ளுரிலும் வெளிநாடுகளும் அறியுமளவிற்கு பின்னாளில் சாந்தன் பிரபலமானார்….
எனது எக்கோ சேம்பர் கருவியை பிரதானமாகக் கொண்டு, அப்போது பொக்ஸ் ஒலிபெருக்கி வசதிகள் வன்னியில் பெரிதாக உழைப்பைத் தராததால் ஒலி அமைப்பாளர்களிடம் பொக்ஸ் இருக்கவில்லை. எனது மனைவி
பாடல்களை மிகவும் தெழிவாக விரும்பி வானொலியில் கேட்பதற்காக பைனியர் 12′ அங்குல ஒலிபெருக்கி பொருத்திய இரண்டரை அடி உயர பொக்ஸ் இரண்டிலேயே மண்டைதீவு ஆ று ஸ்ரேசன் மூலம் அக்காய்;
ஸ்ரீரியோ அம்பிளிபயரில் வீட்டில் பாடல் கேட்டு வந்தார். அந்த பொக்ஸ் செற் மேடை மொனிட்டராக பாவிக்கப்பட்டு அஹீஜா.60.ல் மைக்குள் பொருத்தி எனது
இசைக் குளு சவுண்ட் சிஸ்டம் உருவாக்கி விட்டேன். (அந்த யுமுயுஐ ஸ்ரீரியோ றேடியோ அம்பிளிபயர் 1986 முதல் இன்று வரையும் அதே உறுதியுடன் பழுதின்றி எனது மனைவியின் ஞாபகார்த்தமாக வைத்துப் பாவித்து வருகிறேன்)
நாங்கள் இணைந்த பிறகு வந்த இரண்டாவது நிகழ்வு விநாயகபுரம் முத்துமாரி அம்மன் ஆலய நிகழ்வு. அதற்கு நாங்கள் ஏ.40 காரில் ஏறும்போது நான் ஒரு யமஹா போர்ட்டா 200 ஓர்கனையும் ஏற்றினேன். நான் சாந்தனுக்கு சொன்னபடி முதலாவது இன்ஸ்ருமென்ட் இது, இது எனது வயது நண்பர் தர்மபுரம் ஜெயா சிங்கப்பூரில் தொழில் பார்த்து விட்டு வரும்போது ஆசையாக வாங்கி வந்து வைத்திருந்து பாவித்த பிறகு என்னை அதனை வாங்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.
எனக்கு ஓர்கன் பழக ஆசை இருந்தும் எனது வேலைப் பழு காரணமாக பழக நேரம் கிடைக்காததால் வாங்கத் தாமதம் காட்டி வந்தேன். இப்போ நமது மண்ணின் கலைஞர்கள் புகழ் பெறவும், திறமை காட்டவும், முன்னேறவும்
இக்கருவி என் மூலம் உதவியதும் மகிழ்ச்சியே…!
அன்று அந்த வாகனத்தில் முதலாவது சாந்தன் கோஸ்டியில் இடம் பெற்றிருந்தவை, எம் மண்ணின் மகன் எஸ்.ஜீ.சாந்தன், ஹார்மோனியம் எம்மண் மணம் பரப்பும் இசை வாரிசு நடராஜா இராமநாதன், தவில் வித்துவான் மணியம் அண்ணர், அறிவிப்பாளராகவும், மறக்காஸ் வாத்திய இயக்குனராகவும்
ஈசன், சில நாட்களில் அறிவிப்பாளராகவும் மறக்காஸ் வாத்திய
இயக்குனராகவும் எழுதுமட்டுவாழ் தவம். இவர்களுடன் எனது ஓர்கன், எக்கோ சேம்பர், பொக்ஸ், மைக், மொனிட்டருடன், தேவைப்படுமிடத்து அறிவிப்பாளராக நானும். இவைதான் அன்று மக்களை பரவசப் படுத்திய சாந்தன் இசைக் குழு..
சாந்தனுடன் பல நிகழ்ச்சிகளுக்குச் சென்று பல ருசிகரமான அனுபவங்களை அனுபவித்திருந்தாலும். சிலவற்றை பகிர்ந்து கொள்வது இப்போது மனதிற்கு
இதம்.. ஒரு முறை புங்குடுதீவு இசை நிகழ்ச்சி, அதில் நேரம் கடந்தே எங்களுக்கு மேடை. மக்களை விடியும் வரை தக்க வைத்துக் கொள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எல்லாருமே மக்கள் அதிகம் எதிர் பார்க்கும் நிகழ்ச்சியை கடைசியாகத்தான் மேடை ஏற்றுவது வழக்கம். அது போலவே அன்றும் புங்குடுதீவிலும் அதிகாலை வரை ஊரடங்கு. எங்கள் நிகழ்ச்சி முடியும் வரை வெளியேற, ஆமிக்குப் பயந்து நேரம் கடத்துவதற்காக எங்கள் நிகழ்ச்சி ஒழுங்கை விட மேலதிகமாக சில பாடல்களையும் பாட வேண்டிய கட்டாய சூழ்நிலை, மக்களும் சிலர் தூக்கத்தில் சோர வழமையாக நாங்கள் கமலஹாசனின் தூங்காதே தம்பி தூங்காதே படப் பாடலை அதிரடியாகப் பாடி உற்சாகமாக்குவது வழக்கம். அந்தப் பாடலும் பாடி முடித்து, வேறு துள்ளிசை, நையாண்டி, பலகுரல் இசை என அனைத்து ஆயுதங்களும் முடிந்துபோன நிலையில். எம்.ஜீ.ஆரின் நாடோடி மன்னன் தூங்காதே தம்பி தூங்காதே யை தட்டி விட்டார் எங்கள் சாந்தன்.
மக்களும் சிரித்தபடி ரசித்தபடி தம் அருகே தூக்கத்துக்குப் போய்க் கொண்டிருந்த நண்பர்களை. தம்பிகளை, பிள்ளைகளைத் தட்டி நிமிர வைத்து பாடலைக் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்…
நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது பாடல். ‘சிலர் அல்லும் பகலும் வெறும் கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஸ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்.’.. என்கிற வரி போய்க் கொண்டிருக்க அடுத்த வரி எங்கள்
சாந்தனுக்கு மனதிலிருந்து வாய்க்கு இறங்க மறுத்து… தொடர்ந்தும் திரும்பவும் பாடிப்பார்த்து வந்தும். அந்த இடத்திலிருந்;து மறு வரிக்கு மாற மறுத்தது. ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்த இராமநாதனும் மனதுக்குள் பாடிப் பார்த்தும் அடுத்த வரியை பிடித்துக் கொடுக்க எத்தணித்தும் முடியாமல்… அன்றைக்கென்று சாந்தன் அருகே மேடையில் அறிவிப்பாளராக
அடியேன்தான்… ம்… நான்தான் அனைத்துப் பாடல்களையும் அத்துப்படியாக கேட்டு வைத்துள்ள ஒலிப்பதிவாளராயிற்றே என, என் பக்கம் சாந்தன்,
இராமநாதனின் பார்வை… சரி நான் அந்த வரியை பாடி கடந்து கொடுப்போம் என களமிறங்கி முனுமுனுத்தேன்… என்னிடமும் பாடல் பாச்சாகாட்டி மண்டையை விட்டு தொண்டைக்குள் வரமாட்டேன் என அடம் பிடிக்க… அன்றைக்கு அந்தப் பழைய பாடல்… பழைய கஞ்சிப் பானைக்குள் புதிதாய்த் தலையை விட்ட நாயைப் போல ஆகிவிட.. அந்த பாடல்
இப்படித்தான் என்கிற பாணியில் பாடி முடித்துவிட்டோம்… நெஞ்சில் நிறைந்த
இந்த நிகழ்ச்சி நினைத்தால் சிரிப்பூட்டுகிறது இன்றும்…!
அதே கணம் அன்றைய நிகழ்ச்சியில் எனக்கு நடந்த ஒரு அமானுஸ்யம்.
இது கொஞ்சம் சிலர்ப்பூட்டும் ஒரு சம்பவம்… அன்று இனியும் பாட ஸ்டாக்
இல்லை என்கிற மாதிரி ஆகிவிட்டதால் நாங்கள் பெட்டியை கட்டிவிட்டோம். பிரதான வீதியிலிருந்து உள்ளாக நிகழ்வு நடந்த ஆலயம். அங்கிருந்து நிலம் தெளியும் முன்னாக புறப்பட்டு பிரதான வீதியில் வந்து ஜ.பீ.கே.எப் இந்திய ஆமி பொயின்ற் திறக்கும் வரை (ஊரடங்கு காலம்) இன்னொரு வீதிக்கரை கோயில் முன்பாக நிறுத்தி ஓய்வாக சிறிது நேரம் வாகனத்திலேயே படுத்திருந்து, பின்னர் கிளிநொச்சி வந்து சேர்ந்தோம். அன்று பகல் நித்திரை கொள்ளவில்லை. எனவே மாலை நேரத்தோடே உறங்கச் சென்று படுத்தேன். சிறிது நேரத்தில் கனவு. நாங்கள் நிகழ்வு செய்துவிட்டு வந்த அந்த கோவிலுக்கும் வீதிக்கும் இடையிலாக நாங்கள் வந்த பழைய பாதையில் நான் வாகனத்துள் இருந்து வர, அருகாமை பற்றைகளுக்குள் இருந்து சில
உருவங்கள் எழுந்து என்னை எட்டிப் பார்ப்பது போல… திகைத்து நான் கண் விழித்துவிட்டு… திரும்ப நான் படுக்க…, விட்ட இடத்திலிருந்து அந்தக் காட்சி தொடர்கிறது… மீண்டும் எழுந்து மனைவிக்கு இதைச் சொல்லிவிட்டு படுத்தேன்… ஆனால் மீண்டும் மீண்டும் அதே கனவு விட்ட இடத்திலிருந்து
தொடர்ந்தது… பயங்கரமாயில்லா விட்டாலும் உளரீதியாக, மனரீதியாக என்னை பயப்படுத்திய இந்தக் கனவால் வீட்டிலிருந்த மாமா. மாமி. மனைவி எல்லோரையும் அழைத்து அருகே இருக்கச் சொல்லிப் பயந்தேன்…
மறுநாள் சாந்தனிடம் இச்சம்பவம் பற்றி நான் சொல்ல, சாந்தன் சொன்னார். ‘ஓம் அண்ணை அந்த இடம் ஆதி காலத்துச் சுடலை உள்ள இடம். என்றும் அதில் இப்படியான அமானுஸ்யங்கள் உலவுவதாகவும்’; சொன்னார். ஆனால்
என் வாழ்வில் என் தொழிலே இரவில்தான் அதிகம். ஆனால் எங்குமே எப்போதுமே காத்தோ கருப்போ நான் உணர்ந்ததில்லை. கண்டதில்லை.
இதுவரை இதைப் போல… பயம்…!
இசைச் சமர்….
மற்றொரு சுவையான சம்பவம். சங்கத்தார்வயல். எங்கள் கோஸ்டி கொடி கட்டிப் பறக்கிற நேரம், சாவகச்சேரியில் கோவில் நிகழ்வுக்கு ஏற்பாடு, வழமையான ஏற்பாடுகளோடு சென்றடைந்தோம். நாங்கள் பெருமையோடு
இறங்கி ஆலய முன்றலை சுற்றி வர… சிறிது நேரத்தில் ஒரு சற்று பெரிய வாகனத்தில் ஏராளம் இசைக் கருவிகளோடு ஒரு கோஸ்டி. பெரிய பொக்ஸ்கள், தடல்புடலாக ட்றம்ஸ், கிற்றார், கொங்கோவுடன்.
நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை. எங்கள் இசைக்குழு வேறு விதம். மேடையில் வேஸ்டியுடன் இருந்து கச்சேரி ஸ்டைலில் செய்து.. அப்படியும் தூக்கலாக மக்களின் காதுகளை கவரும் நிகழ்ச்சி எங்களுடையது..
கண் கவரும் அட்டகாச ஏற்பாட்டோடு மேடையில் வாத்தியக் கருவிகளைப் பரப்பி நின்று. அலங்கார நவீன உடைகளோடும் அதி உச்ச ஒலி அமைப்பையும் தங்களோடு கொண்டு வந்து, முதன்மை அறிவிப்பாளர் புகழாரம் முளங்க நடைபெறப் போகும் நிகழ்ச்சி முன், இன்று எங்கள் தம்பட்டம் அறுந்து தொங்கத்தான் போகிறது என்று மிகவும் குறுகித்தான் போனோம். கலங்கிப்போன நாங்கள். நான் ஒரு முடிவு சொன்னேன். எங்கள் கச்சேரியை நாங்கள் முன்னே தொடங்கிச் செய்யப் போவதாகக் கேட்டுச் செய்துவிட்டு,
இந்த இடத்தைவிட்டு நகர்ந்து விடுவோம் என்றும். அடுத்ததாக அவர்களின் நிகழ்ச்சி நடக்கும் போது நாங்கள் இங்கிருந்தால்தானே அவமானம். என நான் எனது ஒலிஅமைப்பு சாதனங்களை மேடையில் அவசரமாக அமைத்து முந்தினேன். திருவிளையாடல் திரைப்பட பாணபத்திரர் தரப்பு போல எங்கள் நிலை அன்று..
அது எங்களுக்கு அறிவிக்கப்படாத ஒரு ஆயத்தமற்ற யுத்தம்தான் அன்று. வன்னிக்கும் யாழுக்கும் இடையான இசை யுத்தம். உண்மையான ஒரு இசைச் சமர்..!
வேறு வழியின்றி சமர்க் களத்தில் நாங்கள். பயபக்தியுடன், மக்களுக்கும், யாழ்ப்பாண கோஸ்டியினருக்கும் எங்கள் விசேட திறமைகளை அடக்கமாகவும் அதே வேளை அட்டகாசமாகவும் வழங்கிய பின் வணக்கம் கூறி… நேரடியாக பொருட்களை வாகனத்தில் ஏற்றினோம்…
அடுத்த கோஸ்டி, மேடையை ஆக்கரமிக்கும் அளவுக்கு உபகரணங்களை பரப்பி மக்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் சற்றுத் தள்ளி நின்று வழக்கமான சுணக்கத்தில் (ஊதியப் பணம் பெறுவதில்)
இருந்தோம்.
மேடையை உபகரணங்களால் அலங்கரித்த வேலை முடிந்து ‘ஹலோ’
சொல்லப்பட்டது.. அது எங்கோ எட்டத்;தில் கேட்குமாப் போல வந்தது, மீண்டும்
அறிவிப்பாளரால் ‘ஹலோ ஹலோ’ சொல்லப்பட்டது. திருப்தியில்லை…! அறிவிப்பாளரிடமிருந்து ஒலிவாங்கி ஒலி அமைப்பாளரின் கைக்கு மாறி ‘ஹலோ ஹலோ மைக் ரெஸ்ரிங்’ சொல்;லப்பட்ட போதும். ஒலிபெருக்கி திருப்பிச் சொல்வதில் அதிக சோம்பல் காட்டியது. வாத்தியக் கலைஞர்கள் தமது வாத்தியங்களை இயக்கிப் பார்த்தார்கள். அதற்கும் உரிய தெளிவு
தரவில்லை. பின்னர்தான் உணரப்பட்டது அங்கு கிடைக்கப்பட்ட மின்சாரம் அவர்களின் அதிக சக்தி தேவைப்பட்ட உபகரணங்களுக்கு போதுமானதாக கிடைக்கவில்லை என்பது.
நான் எனது ஒலி உபகரணங்களுக்குத் தேவையான 600 வாட்ஸ் ‘ஸ்;ரெப் அப் ரான்ஸ்போமர்’ ஒன்றை எப்போதும் கொண்டு செல்வது வழக்கம் மின்சாரம் குறைந்தாலோ கூடினாலோ அதன் மூலம் உயர்த்தியோ குறைத்தோ மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். அது முக்கியம்.. அன்று அவர்கள் கொண்டு வந்த உபகரணங்களுக்கு 3000 றுயுவுவுளு ஸ்ரெப்அப் ராண்ஸ்போமர் தேவைப்பட்டிருக்கும். அதை அவர்கள் அன்று கொண்டு வந்திருக்கவில்லை.
பிறகென்ன.. அவர்கள் சாதாரணமாக ஒரு அம்பிளிபயரில் மைக்குகளை பொருத்தி எக்கோ கருவியும் பாவிக்காமல் சாதாரணமாக நிகழ்ச்சியை வழங்கி முடிக்கவேண்டி ஏற்பட்டது.. அந்த இடம் சங்கத்தார் வயல் என்பது இப்போ யுத்தம் முடிந்த காலத்தில் ஒருநாள் மினி மஹாலிங்கம் அண்ணர் வீட்டில் சந்தித்தபோது பாடகர் ஜே.ஆர்.சுகுமார் கூறித்தான் எனக்குத் தெரியும்.
அந்த நிகழ்வு தெரிந்து செய்யப்பட்டதோ தெரியாமல் நடந்ததோ தெரியாது.
இறைவன் திருவருள் இருந்தால் தடைகளும் உடையும். பாணபத்திரருக்கு நடந்தாற் போல…! கடவுள் இருக்கான் குமாரு….!
இந்தக் காலகட்டத்தில்தான் நாங்கள் நெடுந்தீவுக்கும் நிகழ்ச்சி ஏற்பாடாகி அங்கு பெரிய படகில் எங்களது இசைக்கருவி ஒலிக்கருவிகளுடன் கடல் கடந்து அருமையாக இசை விருந்து வழங்கிவிட்டும் வந்தோம்.
அந்தப் புகழ் மணம் பரப்பி நாம் பயணித்துக் கொண்டிருந்த காலத்தில் சாவகச்சேரி கடந்து பல இடங்களுக்கும் எங்கள் இசைக் குளுவுக்கான தொடர்பை ஏற்படுத்தி எம்மை அழைத்துச் சென்று வரும் எங்கள் சாந்தனின் அபிமான சினேகிதர் புதிய றோசா பஸ் உரிமையாளர். அவரது ஏற்பாட்டில் சாந்தன் இசைக் குளுவினை சிங்கப்பூர் கூட்டிச்சென்று இசை அரங்குகள்
நடாத்த ஆயத்தமாகியிருந்தார்…
நாட்டில் போர் உக்கிரமடையத் தொடங்க… எமது குளுவின் கடல் கடந்த
இசைப் பயணங்கள் நெடுந்தீவுக் கடல் கடந்ததோடு மட்டுப்படுத்தப்பட்டு நின்றது… ஆனால் சாந்தனின் குரலோசை மண் மீட்பென அழைத்துச் செல்லப்பட்டு தங்கங்களை வாரிக் ‘கொடுத்தது’..!.
இன்னொரு சம்பவம் இது போன்று. மல்லாவி பாலையடியில் ஒரு இயக்க நிகழ்ச்சி. அன்று சாந்தனின் நிகழ்வு இல்லை. அரங்க ஒலியமைப்பில் நான். யாழிலிருந்து வந்திருந்த இசைக் குழுவினருக்கு தடல்புடலாக அவர்களின் ஆரவார அடுக்குகளில் வழமை போல, எனது டீழுஓ எனது அனுமதி
தேவைப்படாமலே தூக்கி ஓரங்கட்டப்பட்டு தங்கள் பரிவார அலங்கார கருவிகளை அடுக்கி நிகழ்வு வண் ரூ சொல்லப்படுகிறது..
அன்று அங்கே மின்சாரம் அந்த ஊர் வில்லேஜ் விஞ்ஞானியின் வித்தையில் ட்ராக்டர் ஒன்றில் டிபெரன்சரில் மோட்டர் ஒன்றை சொருகி மின்சாரம் என்று தரப்படுகிறது. நான் எனது கருவிகளின் பாதுகாப்பு கருதி குறைந்தளவு மின்சாரத்தை வைக்குமாறு கேட்டு என்னிடமிருந்த ஸ்டெப் அப் றான்ஸ்போமர்
மூலம் சமாளித்து எடுத்துப் பாவித்துக் கொண்டிருந்தேன். ஆனால் கோஸ்டி செய்ய வந்திருந்த ஒலி இயக்குனர் தங்களது பொருட்களுக்கு மின்சாரம் அதி வலுவாகத் தேவை என (நான் சொல்வதையும் கேட்காமல்) ட்ராக்டரால் வேகத்தை அதிகரிக்கச் சொல்லிக் கேட்க, நான் எனது கருவிகளை மின்சாரத்தை துண்டித்து வைத்துக் கொண்டேன்… சிறிது நேரத்தில் அவர்களது பக்கத்தில் இருந்து புகையும் மணமும் வர, திரும்பிப் பார்த்தேன். அவர்களது
விலை உயர்ந்த மிக்சர் கருவிகள் எரிந்து பழுதாகிவிட்டது. பிறகென்ன… அவர்களது மரியாதையை மக்களுக்குத் தெரியாமல் காப்பாற்றுவதற்காக அவர்களது ஒலிவாங்கிகளின் வயர்களை வாங்கி எனது அம்பிளிபயரில் பொருத்தி நிகழ்ச்சியை தொடர்ந்து செய்து முடித்தோம்… இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் யாரையும் குறைவாக மதித்து நாம் நடக்க முடியாது…. -அன்று ஒலி இயக்குனராக வந்தவர் எனது மாசீக குருவான நித்தி அண்ணரின் மகன் டன்னா, பிற்காலங்களில் இன்றும் டன்னா என்னுடன் அன்பும் மரியாதையும்….!
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கும். பணம் வசதி வரும் வரை அவர்கள் திறமைக்கேற்ற கருவிகள் கைவசம் அப்போது இல்லாது
இருக்கலாம். எனவே எமது துறையில் இருப்போரை நாம் இணைத்து நடக்க வேண்டும்.
நான் இன்னொரு ஊருக்கு விசேட ஒலியமைப்புடன் சென்றால் அந்த ஊர் வளமை ஒலி அமைப்பாளரிடமும் அங்கு மேடையில் பாவனையில் இருக்கும் ஒரு மைக்கோ அல்லது ஒரு ஸ்ரான்டோ அதை அப்படியே இருக்கவிட்டுப் பாவிப்பேன். அவரையும் என் அருகில் இடம் கொடுப்பேன். நாளை அவர் அந்த ஊரில் எனது இந்த மைக்கும் சாந்தன் கோஸ்டியில் பாவிக்கப்பட்டது என்று ஒரு சிறிய விளம்பரத்தையும் தேடிக் கொள்வதோடு அவர் வாழ்வும் வளம் பெறும், சக ஒலியமைப்பாளர்களோடு நேசமாக அணுகும் முறைகளையும்
வளர்த்துக் கொள்வார். அதன் மூலம் இத் தொழிலும் கௌரவம் பெறும்…..!
ஒரு தடவை வழமைபோல இயக்க மேடை நிகழ்வு ஒன்றுக்காக வவுனியா அருகே, சாந்தனுடன் அழைத்துச் சென்றார்கள். புதிதாக காட்டை வெட்டி அமைக்கப்பட்ட காட்டுப் பாதை ஒன்றினூடாக சென்று நிகழ்ச்சிகள் செய்தோம். அது ஓமந்தைக்கு மேற்காக,.. அங்கிருந்த மக்கள் காட்டினார்கள், அதோ மேலே வாகனத்தின் வெளிச்சங்கள் தெரிகிறதே அதுதான் ஆமி இருக்கிற
வவுனியா ரவுண் என்று…, நிகழ்வினை தரமாகச் செய்துவிட்டு இரவிரவாக வந்துவிட்டோம். அடுத்த நாள் காலை சாந்தன் என்னிடம் வந்தார். ‘அண்ணை அருந்தப்பு அண்ணை நாங்கள் நேற்று நிகழ்ச்சி செய்த இடம் நாங்கள் நிகழ்ச்சி முடித்து புறப்பட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகு ஆமி சுற்றி வளைப்பாம், அந்த ஊருக்கு சனங்களும் இயக்கமும் போற வாற பாதையை
ஆமி பிடித்துவிட்டதால் இயக்கம் காட்டின் நடுவாக புதிதாக ஓர் பாதையை வெட்டி எங்களைத்தானாம் முதன்முதலாக அனுப்பியிருந்ததாம் சனத்தை நம்பிக்கையூட்ட’ என்றார். அன்றும் கடவுள்தான் காப்பாற்றி உள்ளார் என்னையும்…. கடவுள் இருக்கான் குமாரு..!
இன்னொரு தடவை கனகராயன்குளத்தில் கண்டி வீதி குளத்தினோடு அமைந்துள்ள ஆலயத்தில் திருவிழாவின் மேடை நிகழ்வுகள்.. முல்லைச் சகோதரி புவனா இரத்தினசிங்கம் அவர்களின் இசைக்கச்சேரியும் அன்று அங்கு என் விசேட ஒலி அமைப்பில்..
நிகழ்ச்சி தொடங்க ஆயத்தாகிக் கொண்டிருந்த வேளை என்னிடம் புவனா அவர்கள் வந்து சொன்னார். இண்டைக்கு உங்கட சாந்தன் நிகழ்ச்சி செய்யிற மாத்தளன் என்கிற இடத்தில, இயக்க மேடைக்கு இப்ப பிற்பகல் பொம்பரால அடிச்சிட்டாங்களாம். என்று… எனக்கு மிகவும் பதற்றமும், கவலையும். என்ன ஆயிற்றோ எனத் தெரியாத நிலை…
சேத விபரங்களை நான் அறிய முடியாது. காரணம்:. அன்று ஆலய ஒலி அமைப்பு ஆயத்தங்களில் இங்கு இருப்பதால் யாரும் தொடர்பிலிருப்பவர்களை
(இயக்க உறுப்பினர்களை) சந்திக்க வெளியிற் செல்ல முடியாது….
என் தொழிலே இதுதானே, யார் யாரோ மேடை ஏறி நிகழ்ச்சி முடித்து வெளியேறிக் கொண்டிருக்க, நான் எப்போதுமே மேடையிலேயேதானே இருக்க வேண்டிய கட்டாயம். என் தொழிலையும் வாழ்வையும் நினைத்துப் பயந்தேன்..
ஆனாலும் இன்று வரை என்னைக் காத்து வரும் தெய்வம் மீது அன்றும் நம்பிக்கை வரக் காரணம் பின்னர் தெரிந்தது:. இச் சம்பவத்தால் அன்று அந்த ஆலய கச்சேரி, கலை நிகழ்வுகள் நேரத்துடன் நிறைவு செய்யப்பட்டு, பின்னிரவில் நான் விட்டிற்கு வந்த போது யாழ் மினி மஹாலிங்கம் அண்ணர் என் வீட்டில் வாங்கிலில் படுத்திருந்தார். ஏன் எனக் கேட்டபோது மாத்தளன் நிகழ்வுகளுக்கு அவரது பொருட்கள்தான் வந்ததாகவும், கடலில் பொருட்கள் ஏற்றுவதில் சிரமம் இருப்பதால் என்னிடமுள்ள பெரிய டீழுஓ ஜ இங்கு எடுக்கலாம் என வந்தாகவும், நான் இல்லாததால் இங்கே அப்படியே சற்று கண்ணயர்ந்து விட்டதாகவும் சொன்னார். அன்று நான் வீட்டில் இருந்திருந்தால். அவருடன் நானும் சென்றிருப்பேன். ஆர்வக் கோழாறால் நான் மேடையில்தான்
நின்றிருந்திருப்பேன்….. அன்று கனகராயன்குள அம்மனின் நிகழ்வின் மூலம் நானும் என்னைத் தேடி வந்ததால் மினி மஹாலிங்கம் அண்ணரும் காப்பாற்றப்
;பட்டோம்…! கடவுள் இருக்கான் குமாரு…!
இசையால் வசமான இதயமிது….
Discussion about this post