அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் நண்பரான நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவிற்கும் பெரமுனவின் பலமானவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு அந்தக்கட்சியில் அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தற்போது பெரமுனவில் இருந்து விலகியவர்கள் மற்றும் கட்சியில் உள்ள ஒரு குழுவை இணைத்து புதிய அரசியல் கூட்டணியை அமைக்க திட்டமிட்டுள்ளமையே இந்த நெருக்கடிக்கு காரணமென தெரியவருகிறது.
ரணிலிடம் பசில் முறைப்பாடு
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச கடந்த வாரம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெரமுனவைச் சேர்ந்த சிலர், நாடாளுமன்ற உறுப்பினர் லான்சா கூட்டணி அமைக்கும் விடயத்தில் சம்பந்தப்பட்டிருப்பது கட்சிக்கு சிக்கலாக மாறியுள்ளதாக தெரிவித்ததை பசில் ராஜபக்ச, அதிபரிடம் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய கூட்டணியை கட்டியெழுப்பும் முயற்சி தீவிரம்
பெரமுனவில் இருந்து விலகிய அமைச்சர்களான அநுர பிரியதர்சன யாப்பா, டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, பிரியங்கர ஜயரத்ன, சுசில் பிரேம ஜயந்த மற்றும் அரசாங்கத்தில் இணைந்துள்ள ஒரு குழுவினரை ஒன்றிணைத்து இந்த புதிய கூட்டணியை கட்டியெழுப்புவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா செயற்பட்டு வருகின்றார்.
சிறி லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும் இந்த கூட்டணிக்கு ஆள் திரட்ட தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அதிபரின் விசேட செயற்றிட்டங்களுக்கு நிமல் லான்சா பொறுப்பேற்றுள்ளதுடன், அவருக்கு அதிபர் அலுவலகத்தில் இருந்து அலுவலகம் மற்றும் பணியாளர்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post