ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி 500 நாட்களுக்கு மேல் கடந்து விட்ட நிலையில், இதுவரை போர் முடிவடையும் வாய்ப்புகள் எங்கும் தென்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், ரஷ்ய வீரர்கள் மத்தியில் அதிருப்தி வேகமாக அதிகரித்து வருவதாகவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உத்தரவுகளுக்கு அவர்கள் இப்போது கீழ்ப்படியவில்லை என்றும் போர் ஆய்வுக்கான நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
பதற்றமான சூழ்நிலை
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 17 மாதங்களாக போர் நடந்து வரும் நிலையில், அவ்வப்போது புதிய புதிய தகவல்களும், அச்சுறுத்தலான செய்திகளும் ஊடகங்களில் வலம்வருவது வழக்கமாகிவிட்டது.
அதிலும் போர் தொடங்கிய காலத்தில் உக்ரைன் எந்தளவுக்கு இந்தப் போரினால் பாதிப்புகளை சந்தித்து வருகின்றது என்பதே முக்கிய செய்தியாக இருந்து வந்த நிலையில், சமீபகாலமாக ரஷ்யாவிற்குள் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை குறித்த செய்திகளே ஊடகங்களில் பெரியளவில் பேசப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் தற்போது அதிபர் விளாடிமிர் புடினின் செயலுக்கு எதிராக, ரஷ்ய வீரர்கள் தங்கள் தளபதிகளின் உத்தரவுகளை இப்போது தொடர்ந்து மீறுவதாக போர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய இராணுவம்
குறிப்பாக 58ஆவது ஒருங்கிணைந்த ஆயுத இராணுவத்தின் தளபதியான கர்னல் ஜெனரல் இவான் போபோவ் சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு ரஷ்ய இராணுவ பதிவர்கள் கடுமையாக பதிலளித்துள்ளனர் என்பதை அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு ஒலிப்பதிவில், போபோவ் புடினிடம் நேரடியாக முன்வரிசையில் உள்ள நிலைமை குறித்து தனது குறைகளை வெளிப்படுத்தியதால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இது ரஷ்ய வீரர்கள் மத்தியில் அதிருப்தி அலையைத் தூண்டியதுடன் அவர்களின் மேலதிகாரிகளின் முடிவுகளை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாக்னர் குழு
இதே போல், பல இராணுவ தளபதிகள் முரண்பட்டு வரும் நிலையில், அவர்களில் கர்னல் ஜெனரல் மிகைல் டெப்லின்ஸ்கி கைது செய்யப்பட்டால், கைப்பற்றப்பட்ட கெர்சன் பகுதியில் இருந்து வெளியேறுவோம் என்று ரஷ்ய இராணுவத்தின் ஒரு பகுதியினர் எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே ரஷ்ய படைகளுக்கு உதவிய தனியார் இராணுவ அமைப்பான வாக்னர் குழு, ரஷ்ய அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய முயற்சித்து, பின்னர் பெலாரஸ் அதிபரின் சமரசத்தால் கிளர்ச்சி கைவிடப்பட்ட நிலையில், தற்போது புதிய சிக்கலாக விளாடிமிர் புடின் உத்தரவுகளுக்கு ரஷ்ய துருப்புக்கள் கீழ்ப்படியாமல் செயல்ப்படும் நிகழ்வு ரஷ்யா – உக்ரைன் போரில் மேலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post