கனடாவின் அனேகமான பகுதிகளுக்கு வளி மாசடைதல் மற்றும் வெப்பம் தொடர்பிலான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
கனடிய மத்திய அரசாங்கத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் காட்டுத்தீ சம்பவங்களினால் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கியூபெக், ஒன்றாரியோ உள்ளிட்ட பல மாகாணங்களில் காட்டுத்தீ பரவுகை ஏற்பட்டுள்ளது. புகை மூட்டத்துடன் கூடிய வளியினால் மக்கள் அசைவுகரியங்களை எதிர் நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் மட்டுமன்றி அமெரிக்காவிலும் வளி மாசடைதல் காரணமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கனடாவின் காட்டு தீ புகை மண்டலங்கள் அமெரிக்கா நோக்கி பரவுவதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
பல்வேறு பாடசாலைகள் கல்வி நிலையங்களில் வெளிப்புற விளையாட்டு நிகழ்வுகள் பயிற்சி நிகழ்வுகள் என்பன ரத்து செய்யப்பட்டுள்ளன. கனடாவின் ஒன்பது மாகாணங்களில் 440 இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவற்றில் அரைவாசிக்கும் மேற்பட்டவை கட்டுக்கு அடங்காதவை என தெரிவிக்கப்படுகிறது. இதுவரை காட்டு தீ காரணமாக சுமார் 40,000 சதுர கிலோமீட்டர் பரப்பு தீக்கிரையாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
Discussion about this post