இலங்கையில் வாகன சாரதிகளை இலக்கு வைத்து புதிய திட்டமொன்று நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் வகையில் சில திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் வாகனம் செலுத்துபவர்களின் சிறுநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு அவர்கள் குடிபோதையில் இருக்கிறார்களா, இல்லையா என்பதை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்களென சந்தேகிக்கப்படும் நபர்களை பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்து சென்று அவர்களின் சிறுநீர் மாதிரிகளை பரிசோதிப்பதன் மூலம் மது மட்டுமின்றி போதைப்பொருளும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய முடியும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
புதிய வேலைத்திட்டத்தின் கீழ் 6 வகையான மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய முடியும்.
முன்னதாக வாகன சாரதிகளின் சிறுநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போது அது மருத்துவரின் மேற்பார்வையில் நடந்துள்ள போதும் பொலிஸாரின் நேரடித் தலையீட்டில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை விசேட அம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவதற்குத் தேவையான உபகரணப் பெட்டிகள் தற்போது பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், முதலில் மேல் மாகாணத்தில் இருந்து ஆரம்பிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
Discussion about this post