ஐபிஎல் தொடரின் இன்று நடைபெற்ற 47வது போட்டியில் இறுதி ஓவரில் தமிழக வீரரின் துல்லியமான பந்து வீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத்தை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 171 ஓட்டங்கள் குவித்தது. ரிங்கு சிங் 46 ஓட்டங்களும், நிதிஷ் ராணா 42 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஹைதரபாத் அணி தரப்பில் நடராஜன் மற்றும் ஜென்சன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். புவனேஷ்வர்குமார், மார்கண்டே, தியாகி மற்றும் மார்க்ரம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அதன் பின்னர் களமிறங்கிய ஹைதரபாத் அணியில் அபிஷேக் சர்மா 9 ஓட்டங்களிலும், மயங்க் அகர்வால் 18 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ராகுல் திரிபாதி அதிரடியாக 9 பந்துகளில் 20 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ரசல் ஓவரில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தபோது அணித்தலைவர் மார்க்ரம் வெற்றிக்காக போராடினார். அதிரடியில் மிரட்டிய ஹெயின்ரிச் கிளாஸன் 20 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 36 ஓட்டங்கள் விளாசினார். அவரைத் தொடர்ந்து மார்க்ரம் 41 ஓட்டங்களில் இருந்தபோது ரிங்கு சிங்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் ஹைதரபாத் அணியின் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி வீசினார். மூன்றாவது பந்தில் அப்துல் சமாத்தை 21 ஓட்டங்களில் வருண் வெளியேற்றினார்.
கடைசி பந்தில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்டதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதனை புவனேஷ்வர்குமார் எதிர்கொண்டார். அந்த பந்தை வருண் துல்லியமாக வீசி டாட் வைத்தார். இதனால் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது
Discussion about this post