இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புத்தாண்டு தொடர்பான உள்ளூர் கலாசார அம்சங்களின் அனுபவங்களை வழங்கும் New Year in Paradise 2023 புத்தாண்டு விழா நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் உனவடுன கடற்கரையில் நிகழ்வு நடைபெற்றது.
புத்தாண்டு விழாவானது புத்தாண்டு தொடர்பான பல கலாசார விடயங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட புத்தாண்டு சாப்பாட்டு மேசை சுற்றுலா பயணிகளின் ஈர்ப்பை பெற்றிருந்தது.
இங்கு வெளிநாட்டினருக்காக முட்டி உடைத்தல், யானைக்கு கண் வைத்தல், சறுக்கு மரம் ஏறுதல், இளவரசன், இளவரசி தேர்வு என பல போட்டிகள் நடத்தப்பட்டன.
உள்ளூர் நடனம், மேளம் முழங்க கலாச்சார நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இலங்கைக்கு வருகை தந்த சிறுவர்களுக்காக கடற்கரையில் மணல் கோட்டை உருவாக்கும் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளூர் உணவைத் தயாரிக்கும் நேரடி அனுபவத்தை வழங்குவதற்காக, உள்ளூர் இனிப்புகளுடன் கூடிய கிராமிய சமையலறையும் புத்தாண்டு விழாவில் சேர்க்கப்பட்டது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புத்தாண்டு அனுபவத்தை வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த புத்தாண்டு நிகழ்வுக்கு சுற்றுலா அமைச்சும் சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையும் அனுசரணை வழங்கியுள்ளன.
Discussion about this post