பாதுகாப்பு கருதி தலையணைக்குள் மறைத்து வைத்திருந்த ரூபா 15 இலட்சத்தை நேற்றுமுன்தினம் யாரோ திருடிச் சென்றுவிட்டதாக பணத்தின் உரிமையாளரான பெண் வெயாங்கொடை காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
வெயாங்கொடையில் வசிக்கும் முறைப்பாட்டாளர் சுகாதார அமைச்சில் பணிபுரிகிறார்.
காணியை விற்று கிடைத்த தொகையின் ஒரு பகுதியான இந்தத் தொகையை அவர் முன்பு வங்கியில் வைப்பு செய்திருந்தார். நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் வங்கிகள் முடங்கினால் பணம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற சந்தேகத்தில் கடந்த ஜனவரி மாதம் ஒரு நாள் கணக்கில் இருந்த பணத்தை தனது வீட்டிற்கு கொண்டு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தான் கொண்டு வந்த பணத்தை தலையணைக்குள் மிகவும் கவனமாக மறைத்து வைத்ததாக அவர் கூறியதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
இந்த தலையணையை தலையில் வைத்துக்கொண்டு தான் தூங்குவதாகவும், தலையணைக்குள் பணம் இருப்பது கணவருக்கும், வேறு யாருக்கும் தெரியாது என்றும் அவர் காவல்துறையில் கூறியதாக கூறப்படுகிறது.
தலையணைக்குள் மறைத்து வைத்திருந்த பணத்தை யார் திருடியது என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது என அவர் கூறுவதாகவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
நேற்று முன்தினம் பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து படுக்கையறைக்கு சென்றபோது, பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்த தலையணை கிழிந்து போர்வை சிதறி கிடந்ததை பார்த்தார். தலையணையில் பணம் இல்லாததை பார்த்து காவல்துறையில் புகார் செய்தார்.
கம்பஹா பிரதேச சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் ஆலோசனைக்கமைய, கம்பஹா உதவி காவல்துறை அத்தியட்சகர் நிஷாந்த ஹேரத்தின் வழிகாட்டலின் கீழ், வெயங்கொடை காவல் நிலைய பிரதான பரிசோதகர் டபிள்யூ.ஏ.என்.ரங்கனா, இந்த பணத்தை திருடியவர்களை கைது செய்ய முக்கிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
Discussion about this post