பண்டிகை காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், விவசாயிகள் கொண்டு வரும் மரக்கறிகளை கொள்வனவு செய்ய தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளதால், மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், விற்பனை செய்யப்படுவதில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஏனைய வருடங்களில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் அதிகளவான மரக்கறிகள் கொள்வனவு செய்யப்படுவதாகவும் பொருளாதார மையத்தில் மரக்கறிகளின் விலைகள் சற்று அதிகமாகவே காணப்படுவதாகவும் வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
யாழ்ப்பாணம் உட்பட நாடளாவிய ரீதியில் அனைத்து பகுதிகளிலிருந்தும் பெருமளவிலான விவசாயிகளால் பயிரிடப்பட்ட மரக்கறிகள் மற்றும் பழவகைகளை கடந்த 1ஆம் திகதி தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த மரக்கறிகளை மொத்தமாக கொள்வனவு செய்வதற்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வியாபாரிகள் வருகை தந்துள்ளமையினால் மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்து விற்பனை செய்யப்படாமல் உள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விவசாயிகள் அதிக பொருட்செலவில் மரக்கறிகளை பயிரிட்டாலும், அதிக பணம் செலவழித்து கொண்டு வந்தாலும், மக்கள் காய்கறிகளை வாங்காமல் இருப்பதே அவற்றின் விற்பனையின்மைக்கு முக்கிய காரணம் என வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.
மக்களிடம் பணப்பற்றாக்குறையால், நுகர்வோர் குறைந்த அளவே காய்கறிகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், காய்கறி மொத்த வியாபாரிகளும் குறைந்த அளவே காய்கறிகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும் தமிழ் , சிங்கள புத்தாண்டை இலக்காக கொண்டு பயிரிட்டு அறுவடை செய்யும் மரக்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காவிடின் தாம் எதிர்காலத்தில் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post