அதிகாரப்பூர்வமில்லாத எல்லை கடக்கும் பகுதிகள் வழியாக தத்தம் நாடுகளுக்குள் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்களை நிராகரிப்பது தொடர்பில் கனடாவும் அமெரிக்காவும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இரண்டு குழந்தைகள் உட்பட, இந்தியக் குடும்பம் ஒன்று கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நடந்தே நுழையும் முயற்சியின் போது எல்லைப்பகுதியில் உயிரிழந்துகிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.
அதாவது, கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதியில், அதிகாரப்பூர்வமற்ற எல்லை கடக்கும் பகுதி வழியாக, பலர் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள்ளும், அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள்ளும் நுழைந்துவருகின்றனர்.
தற்போது, இப்படி எல்லை கடப்பதை தடுக்கும் வகையில் கனடாவும் அமெரிக்காவும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளன.
இன்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கனடா வருகிறார். அவர் கனடா வந்ததும், அவரும் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும் இந்த ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, எல்லையின் இரண்டு பக்கத்திலும், அதிகாரிகள் நிறுத்தப்படுவார்கள். அவர்கள், தங்கள் நாட்டுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரை திருப்பி அனுப்புவார்கள்.
இந்த ஒப்பந்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டியதில்லை என்பதால், உடனடியாக நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post