சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலி அமைப்பின் உறுப்பினர்கள் தொடர்பில் இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில், இலங்கை இராணுவத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு தொடர்பான விசாரணை இன்று(25.01.2023) நடைபெறவுள்ளது.
இந்த மேன்முறையீடு தொடர்பான தகவல்கள் சுருக்கமாக கீழே வழங்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தக் காலப் பகுதியில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் 06 கேள்விகளைக் கொண்ட RTI விண்ணப்பம் (2019.04.04) அன்று இராணுவத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு 2019.06.25 ஆம் திகதி “இறுதி யுத்தக் காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் இராணுவத்திடம் சரணடையவில்லை. இலங்கை அரசாங்கத்திடமே சரணடைந்தனர்.” என இராணுவம் பதில் வழங்கியிருந்தது.
03.10.2019 – இராணுவம் வழங்கிய பதிலில் திருப்தியில்லை என்பதால், இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து மூன்று வருடங்களுக்குப் பின்னர் 2022.11.03 அன்று இந்த மேன்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது ஆணைக்குழு முன்பாக சாட்சியம் வழங்கியிருந்த இராணுவம் தங்களிடம் புலிகள் எவரும் சரணடையவில்லை எனவும், சரணடைந்தவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் தம்மிடம் இல்லை என்றே கூறியிருந்தது.
எனினும், இராணுவம் பொய் கூறுவதாக சுட்டிக்காட்டி இராணுவத்திடம் புலிகள் சரணடைந்தமைக்கான ஆதாரங்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டது.
இதனை ஆராய்ந்த ஆணைக்குழு மேன்முறையீட்டாளர் எழுத்துமூல சமர்ப்பணம் ஒன்றை வழங்க வேண்டுமெனவும் அதற்குப் பதில் எழுத்துமூல சமர்ப்பணம் ஒன்றை இராணுவம் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.
மேன்முறையீட்டாளரால் நீண்ட எழுத்துமூல சமர்ப்பணம் 2022.12.01 ஆம் திகதி இலங்கை இராணுவத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் 2023.01.04 ஆம் திகதி மீண்டும் இந்த மேன்முறையீடு ஆணைக்குழு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பதில் எழுத்துமூல சமர்ப்பணத்தை வழங்க 17.01.2023 ஆம் திகதி வரை கால அவகாசத்தை இராணுவம் கோரியது.
எனினும், 23.01.2023ஆம் திகதிக்கு முன்னர் பதில் எழுத்துமூல சமர்ப்பணத்தை வழங்க வேண்டுமென ஆணைக்குழு இராணுவத்துக்கு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து 2,253 பக்கங்களைக் கொண்ட நீண்ட பதில் எழுத்துமூல சமர்ப்பணத்தை 2023.01.16 ஆம் திகதி இராணுவம் வழங்கியது.
இராணுவம் வழங்கிய பதில் எழுத்துமூல சமர்ப்பணத்தில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட 06 கேள்விகளுக்கும் பதில் இல்லை என ஆணைக்குழுவுக்கும், இராணுவத்துக்கும் எழுத்துமூல சமர்ப்பணம் ஒன்று மேன்முறையீட்டாளரால் நேற்று முன்தினம்(2023.01.23) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்றைய தினம் (25.01.2023) மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Discussion about this post