மத்தியதரைக் கடல் பரப்பில் மீட்கப்பட்ட 234 குடியேறிகளுடன் கடலில் தரித்து நின்ற மீட்புக் கப்பல் ஒன்றைத் தனது துறைமுகத்துக்குள் அனுமதிப்பதற்கு பிரான்ஸ் அரசு முடிவுசெய்துள்ளது.
கப்பல் இன்று வெள்ளிக்கிழமை பிரான்ஸின் தெற்கில் உள்ள தூலோன் இராணுவத் துறைமுகத்துக்கு வந்து சேரும். அங்கு வைத்து அகதிகளுக்கு உடனடி மனிதாபிமான மருத்துவ உதவிகள் அனைத்தும் வழங்கப்படும். பாதுகாப்புப் பரிசோதனைகளுக்குப் பிறகு அகதிகளது புகலிட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமன்னா அறிவித்திருக்கிறார்.
“ஓஷன் வைக்கிங்” என்ற அந்த மனிதாபிமான மீட்புக் கப்பல் கடலில் மீட்கப்பட்ட பெண்கள் குழந்தைகள் அடங்கிய சுமார் 234 அகதிகளுடன் கடந்த 20 நாள்களுக்கு மேலாகத் துறைமுகம் செல்வதற்காக இத்தாலியின் அனுமதிக்காகத் தரித்து நின்றது.
ஐரோப்பிய மனிதாபிமான சேவை அமைப்பான தொண்டு நிறுவனத்தால் நோர்வே நாட்டின் கொடியுடன் இயக்கப்படுகின்ற அந்த மீட்புக் கப்பல் மத்தியதரைக் கடலில் தத்தளிக்கும் அகதிகளை மீட்டுக் கரை சேர்க்கின்ற பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்தக் கப்பல் விவகாரம் தொடர்பில் பிரான்ஸ் – இத்தாலி இடையே கடந்த சில நாட்களாகப் பெரும் இழுபறி நிலை காணப்பட்டது. இத்தாலியின் மறுப்பை பொறுப்பற்ற செயல் என்று கூறிப் பாரிஸ் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தது. இத்தாலி ஒரு பொறுப்புள்ள ஐரோப்பிய நாடு என்ற தகுதியைக் காப்பாற்றத் தவறியதற்காக பிரான்ஸ் தனது வருத்தத்தை வெளியிட்டிருக்கிறது.
அதற்குள் கப்பலின் உள்ளே மனிதப் பேரவலம் உருவாகி அகதிகள் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கக்கூடிய நிலைவரம் தோன்றியிருந்தது. அதனையடுத்தே பிரான்ஸ் அந்தக் கப்பலைத் தனது துறைமுகத்துக்குள் அனுமதித்திருக்கிறது.
Discussion about this post