வடக்கு மாகாண மக்களுக்கும் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் நிர்மாண மற்றும் பராமரிப்பு உதவிகளை வழங்குவதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நகர அபிவிருத்தி அதிகாரசபை ஊடாகவோ அல்லது முதலீட்டு சபை ஊடாகவோ வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு கையளிக்கப்படும் காணிகளில் வெளிநாட்டு பயனாளிகள் வீடு கட்டுவதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் நிர்மாணம் மீள்நிர்மாணம் அல்லது கட்டட பராமரிப்பு சேவைகளை எதிர்பார்க்கும் வடக்கு மாகாண உத்தியோகத்தர்களும் மற்றும் வடக்கு மாகாண தனியார் நில உரிமையாளர்களும் இந்தத் திட்டத்தால் பயனடையலாம்.
வடக்கு மாகாணத்தில் நில உரிமைகளை கொண்ட நிர்மாணம் மீள்நிர்மாணம் அல்லது கட்டட பராமரிப்பு சேவைகளை எதிர்பார்க்கும் வெளிநாட்டில் வதிவோரும் இந்தத் திட்டத்தால் பயனடையலாம்.
கோரிக்கைகளை பெற்று அதனுடன் தொடர்புடைய விடயங்களை ஆராய்ந்து வாடிக்கையாளருடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் செயன்முறை 30 நாள்களுக்குள் வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுமானங்கள் நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் விவரக் குறிப்புகளுக்கு அமைவாக இருப்பதோடு பசுமையானதும், சுற்றுச் சூழலுக்கு ஏற்புடையதும் கலாச்சார விழுமியங்களை பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும்.
அத்துடன் செலவு குறைந்த அணுகுமுறைகளை உள்ளடக்கி இருப்பதனை உறுதி செய்ய வேண்டும் என்பதே அடிப்படைக் கொள்கை ஆகும்.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனமாக மாகாண கட்டடங்கள் திணைக்களம் செயற்படுவதோடு திட்டத்தைக் கண்காணிக்கும் நிறுவனமாக ஆளுநர் செயலகம் செயற்படும்.
கண்காணிப்பு குழுவில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர் அல்லது ஆளுநரால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி, பிரதிப் பிரதம செயலாளர் பொறியியல் சேவைகள், உள்ளூராட்சி ஆணையாளர், காணி ஆணையாளர் மற்றும் பணிப்பாளர் கட்டடங்கள் திணைக்களம் ஆகியோர் உள்ளடங்குவார்கள்.
ஆர்வமுள்ளவர்கள் தேவையான மேலதிக விபரங்களினை மாகாணப் பணிப்பாளார் அலுவலகம், மாகாண கட்டடங்கள் திணைக்களம், கடற்கரை வீதி, குருநகர், யாழ்ப்பாணம் என்ற முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும் என்றுள்ளது.
Discussion about this post