நாட்டில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கெஹகலிய ரம்புக்வெலவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்றுப் புதன்கிழமை நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
மருந்துத் தட்டுப்பாடு தொடர்பில் துரித கண்காணிப்புகளை மேற்கொள்வதற்காக அமைச்சுக்களின் செயலாளர்களை உள்ளடக்கிய பிரத்தியேகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகள் ஆகியவற்றைத் தடையின்றி மக்களுக்கு விநியோகிப்பது தொடர்பில் அரசாங்கம் அக்கறையுடன் செயற்படுகின்றது.
விநியோக முகாமைத்துவம் தொடர்பாக அமைச்சுக்களின் செயலாளர்களை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர், பிரதமர் செயலாளர் ஆகியோரும் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர்.
மருந்துக் கொள்வனவுக்குக்காகக் கிடைத்த பெரும்பாலான நிதி உதவிகள் கடனுதவிகளாகும். உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் தொடர்ச்சியாக மீள் செலுத்தப்பட்டு வருகின்றன.
கடன்களை மீளச் செலுத்துவதால் உதவிகளும் கிடைத்துள்ளன. அவ்வாறு கிடைத்த உதவிகளில் சில வீதிச் சீரமைப்புக்களும் முன்னெடுக்கப்படவுள்ளன. – என்றார்.
Discussion about this post