கையூட்டல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக புதிய சட்ட வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம், சட்டவரைவின் கீழ் குற்றத்தைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் எந்தவொரு நபரையும் நீதிவானின் உத்தரவு அல்லது பிடியாணை இல்லாமல் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் கைது செய்ய ஒரு சுயாதீன ஆணைக்குழுவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரை அதிகபட்ச காலம் 24 மணிநேரம் தடுப்புக்காவலில் வைத்திருக்க முடியும். உத்தேச சட்டத்தின் கீழ் இலங்கைக்கு வெளியில் எந்தச் செயலையும் செய்திருந்தால் (யாருக்கு எதிராக நியாயமான முறைப்பாடு, சந்தேகம் அல்லது நம்பத்தகுந்த தகவல் இருந்தால்) அவர்களை கைது செய்யலாம்.
ஒரு நபர் ஒரு குற்றத்தைச் செய்துள்ளார், செய்கிறார் அல்லது செய்யப் போகிறார் என்று சந்தேகிக்கப்பட்டால் அல்லது நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருந்தால், எந்தவொரு நடத்தையையும் இரகசியமாக கண்காணிப்பதற்கும், எந்தவொரு தகவல் தொடர்புகளையும் பதிவு செய்வதற்கும் ஊழலுக்கு எதிரான பிடியாணைக்கு சுயாதீன ஆணைக்குழுவால் மேல் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
தனித்தனியாக எந்தவொரு தகவல் தொடர்பு அல்லது சேமிப்பக சேவைகள் அல்லது ஏதேனும் தரவு அல்லது தகவல் அல்லது பிற விடயங்களின் சாதனங்கள் தொடர்பான முடக்குதல் அல்லது குறியாக்கச் சேவைகளை வழங்கும் எந்தவொரு நபருக்கும், சேவை அல்லது உபகரணங்களைத் திறக்க மற்றும் கையாள்வதற்கு நீதிவானின் அனுமதியைப் பெறலாம் என்று சட்டவரைவில் உள்ளது.
இந்த சட்டவரைவில் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புகள் பற்றிய தனிப் பிரிவு உள்ளது. இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட வேண்டும என்று பொதுத் துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்த வலியுறுத்துகிறது.
அத்தகைய அறிவிப்புகளைச் சமர்ப்பிப்பதற்கான ஒரு மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பை இது வழங்குகிறது மற்றும் பொருத்தமான அதிகாரிகளால் அத்தகைய அறிவிப்புகளை மேற்கோள் காட்டவும் விசாரணைகளை நடத்தவும் அனுமதிக்கிறது.
சட்டமானது பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. குற்றச்சாட்ட முன்வைக்கப்பட்டு நீதிவான் முன் சுருக்கமுறை விசாரணைக்குப் பின்னர் குற்றவாளியாக காணப்பட்டால் அந்த நபருக்கு 2 லட்சம் ரூபாவுக்கு விஞ்சாத தண்டம் அல்லது 10 ஆண்டுகளுக்கு விஞ்சாத சிறைத்தண்டனை அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம் என்று அந்தச் சட்ட வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
108 பக்கங்கள் கொண்ட ஊழல் தடுப்பு சட்டவரைவு பொது மக்களின் கருத்துக்காக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post