அரச நிதி தொடர்பான குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா விடயதானத்துக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட்டு, குழு அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் அநுர பஸ்குவல் சிறப்புரிமை மீறல் முறைப்பாட்டை பாராளுமன்ற அமர்வின்போது சபையில் முன்வைத்தார்.
இராஜாங்க அமைச்சர் அநுர பஸ்குவல் முன்வைத்த சிறப்புரிமை மீறல் தொடர்பான முறைப்பாட்டுக்கு பதிலளிக்க, அரச நிதி தொடர்பான குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா விளக்கமளிக்க வாய்ப்பு கோரினார்.
அதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை.
சிறப்புரிமை மீறல் தொடர்பான முறைப்பாடு பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு உங்களின் கருத்தை குறிப்பிடுங்கள்.
தற்போது அது குறித்து உரையாற்ற அனுமதி வழங்க முடியாது என சபாநாயகர் குறிப்பிட்ட கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, சுயாதீன உறுப்பினர் சந்திம வீரக்கொடி, தயாசிறி ஜயசேகர உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அரச நிதி தொடர்பான குழுவின் தலைவரின் செயற்பாடுகளுக்கு எதிராக குழுவின் உறுப்பினர் சிறப்புரிமை மீறல் விசாரணையை முன்னெடுக்குமாறு குறிப்பிடுவது முறையற்றதாகும். இவ்வாறானவர்களுடன் எவ்வாறு இணக்கமாக செயற்பட முடியும் என சுயாதீன உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அதிருப்தி வெளியிட்டார்.
சபாநாயகர் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஒக் 7)பாராளுமன்ற அமர்வு கூடியபோது இராஜாங்க அமைச்சர் அநுப பஸ்குவல், அரச நிதி தொடர்பான குழுவின் தலைவர் விடயதானத்துக்கு அப்பாற்பட்ட வகையில் அதிகாரத்தை பயன்படுத்தி செயற்படுகிறார். இவ்விடயம் குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்து, அவருக்கு எதிராக விசாரணையை முன்னெடுக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
இதன்போது ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய அரச நிதி தொடர்பான குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா, இராஜாங்க அமைச்சர் அநுப பஸ்குவல் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை நான் முழுமையாக செவிமடுக்கவில்லை. அவர் முன்வைத்த 3 குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கிறேன் என்றார்.
அவரை தொடர்ந்து உரையாற்றிய சபாநாயகர், அவ்வாறு உரையாற்ற முடியாது. முன்வைக்கப்பட்டுள்ள விடயம் பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அனுப்பப்படும். அங்கு பதிலளியுங்கள் என்றார்.
இதன்போது மீண்டும் உரையாற்றிய ஹர்ஷ டி சில்வாவுக்கு வாய்ப்பளிக்காததற்கு, அவர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். கோபமாக பேசுகின்ற காரணத்தினால் உரையாற்ற வாய்ப்பளிக்க முடியாது. அதற்கு உங்களுக்கு உரிமையில்லை என சபாநாயகர் ஹர்ஷ டி சில்வாவை நோக்கி குறிப்பிட்டார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றவர்கள் மற்றும் ஊழல் மோசடி தொடர்பில் விசாரணையை முன்னெடுக்க அரச நிதி தொடர்பான குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவுக்கு அதிகாரம் உள்ளது. ஆகவே, அவரது கருத்துக்கு வாய்ப்பளியுங்கள் என்றார்.
இதன்போது சபாநாயகர், தற்போது அவர் உரையாற்ற அனுமதி வழங்க முடியாது. நீங்கள் இந்த விடயத்தை தவறான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றார்.
அவரையடுத்து எழுந்து உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிறப்புரிமை மீறல் தொடர்பான முறைப்பாட்டை முன்வைக்கும் முன்னர் அதனை சபாநாயகருக்கு அறிவிக்க வேண்டும்.
முன்வைக்கப்பட்ட சிறப்புரிமை மீறல் தொடர்பான முறைப்பாட்டை முதலில் சபாநாயகர் ஆராய்ந்து, அவ்வாறு சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்ததன் பின்னரே, அதனை சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்படும். தற்போது அரச நிதி குழுவின் தலைவர் சிறப்புரிமையை மீறியுள்ளதாக ஒரு உறுப்பினர் குறிப்பிட்டுள்ளதற்கு நீங்கள் (சபாநாயகர்) அனுமதி வழங்கியுள்ளீர்கள்.
முறைப்பாடு குறிப்பிடப்பட்டதன் பின்னர் அதற்கு பதிலளிக்க அரச நிதி குழுவின் தலைவருக்கு அனுமதி வழங்காமல், சிறப்புரிமை குழுவில் பதிலளிக்குமாறு கூறுகிறீர்கள். பாராளுமன்ற உறுப்பினர் முன்வைத்த விடயம், உண்மையில் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதா என்பதை சபாநாயகர் முதலில் சபைக்கு அறிவிக்க வேண்டும் என்றார்.
Discussion about this post