சிங்களம் மற்றும் தமிழ்மொழி மூல மாணவர்களுக்கு சட்டக் கல்லூரியில் முதலாம், இரண்டாம் மூன்றாம் ஆண்டுகளில் தத்தமது மொழிகளில் பரீட்சை எழுதக்கூடிய வகையில் வாய்ப்பளிக்கப்பட்டது. எனினும் அது தற்போது, இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
அந்த வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, மாணவர்களின் கோரிக்கைக்கு அமைய தமிழ், சிங்கள மூலம் சட்டக்கல்லூரி பரீட்சை எழுதுவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி கடந்த 2015 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், அந்த அதிவிசேட வர்த்தமானி செல்லுபடியற்றதாக்கப்பட்டு, மீண்டும் சட்டக் கல்லூரி பரீட்சைகளை 2023 ஆம் ஆண்டு முதல் ஆங்கில மொழியில் எழுத வேண்டுமென அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.
அதை மாற்றியமைக்க வேண்டும் என்று மாணவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் ஆராய வேண்டும் என்று சட்ட ஆய்வுக்குழுவின் தலைவராகவுள்ள, பிரதம நீதியரசரிடம் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. சட்ட ஆய்வுக் குழு முன்வைக்கும் தீர்மானத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதன்பின்னர் கருத்துத் தெரிவித்த கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அடுத்த வருடம் முதல், தரம் ஒன்றில் இருந்து பிரயோக ஆங்கில மொழியை கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். உத்தேச கல்வி மறுசீரமைப்பின் ஒரு அங்கமாக இதை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
Discussion about this post