ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் பதவியில் இருந்து அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க நீக்கப்பட்டுள்ளார்.
விரைவில் பதவியேற்க உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை துமிந்த திஸாநாயக்க அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை பெற்றுக்கொள்வார் என்று கூறப்படுகின்றது. அதையடுத்தே அவர் சுதந்திரக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
துமிந்த திஸாநாயக்க அரசாங்கத்தில் இணைந்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டால், அவர் கட்சியில் வகித்து வரும் தேசிய அமைப்பாளர், மத்திய செயற்குழு உறுப்பினர் மற்றும் அநுராதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவார் எனக் கூறப்படுகின்றது.
அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண, ஜகத் புஷ்பகுமார, சுரேன் ராகவன், சமர சம்பத் தஸநாயக்க, சாந்த பண்டார ஆகியோர் ஏற்கனவே அரசாங்கத்தில் இணைந்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் மற்றும் ராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.
Discussion about this post