ரிக்ரொக் செயலிக்கு அடிமையாகி, அதன்மூலம் காதல் வயப்பட்ட 10 சிறுமிகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உளநல சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதீத கைபேசிப் பாவனை காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 16 சிறார்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் உளநல சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 10 சிறுமிகள் ரிக்ரொக் எனப்படும் சமூக வலைத்தளச் செயலியில் அதீதமாக மூழ்கி உளநலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறுமிகள் ரிக்ரொக் செயலியில் நண்பர்களாகி காதல் வயப்பட்டுள்ளனர் என்றும் சிகிச்சையின்போது தெரியவந்திருக்கின்றது.
ஏனைய 6 சிறுவர்கள் நாளாந்தம் பெரும் பகுதியை கைபேசிகளுக்குள் செலவிட்டு, அதிலிருந்து மீள முடியாதவாறு உளநலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போதைப் பொருளுக்கு அடிமையாவது எவ்வளவு ஆபத்தானதோ அந்தளவுக்கு சிறுவர்கள் கைபேசிப் பாவனைக்கு அடிமையாவதும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறான பிரச்சினைக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்க மிகச் சொற்பமே என்று தெரிவித்த மருத்துவர்கள், சமூகத்தில் பெரும் எண்ணிக்கையான சிறார்கள் உளநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டினர்.
பெற்றோர் தங்களின் பிள்ளைகளின் கைபேசிப் பாவனை தொடர்பில் அதீத கவனத்துடன் இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ள மருத்துவர்கள், உரிய உளவளச் சிகிச்சைகள் வழங்குவதன் மூலம் சிறார்களை இந்தப் பிரச்சினையில் இருந்து மீட்க முடியும் என்றும் குறிப்பிட்டனர்.
Discussion about this post