சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஊழியர் மட்ட இணக்கம் தொடர்பான ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. அங்கு கருத்துத் தெரிவித்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது-
தற்போதைய ஜனாதிபதி எதிரணி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது சர்வதேச நாணய நிதியம் தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். சர்வக்கட்சி மாநாட்டின்போதும், நாடாளுமன்றத்தில் வைத்தும் அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். ஏனெனில் நாடாளுமன்றத்துக்கே நிதி அதிகாரம் உள்ளது.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை முன்மாதிரியாகக் கருதி, சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஊழியர் மட்ட இணக்கம் தொடர்பான ஒப்பந்தத்தை சபையில் முன்வைத்து, பகிரங்கப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். அப்போதுதான் அவை தொடர்பில் ஆராயக்கூடியதாக இருக்கும். முடிந்தால் நாளையே சமர்பபிக்க வேண்டும் என்று கோருகின்றேன்-என்றார்.
Discussion about this post