மாகாணசபைகள் செயற்படாத பின்புலத்தில் , மாகாணங்களின் நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்கும் , மாகாணசபைகளின் செலவுகளை முகாமைத்துவம் செய்வதற்குமான பொறுப்பு ஆளுனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய , ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் சகல மாகாண ஆளுனர்களுக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சவால் மிக்க காலப்பகுதிக்குள் அரச செலவுகளைக் கட்டுப்படுத்தி , பொது மக்கள் சேவைகளை உரிய முறையில் பராமறிப்பது அவசியமானதாகும்.
மாகாணசபை நிர்வாகம் , அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் மாகாணசபைகளின் செலவுகளைக் கட்டுப்படுத்தும் போது தேசிய கொள்கை மற்றும் முன்னுரிமைகளுக்கு அமைவாக செயற்படுவது அவசியமாகும்.
தமது மாகாணங்களின் அபிவிருத்தி முன்னுரிமைகளை இனங்காணும் போதும் , அத்தோடு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செயற்படுத்தும் போதும் ஆளுனர்கள் குறித்த மாகாணத்திலிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி செயலகத்துடன் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய குறைந்தபட்சம் இரு வாரங்களுக்கொருமுறை தமது மாகாணங்களிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து , மாகாணசபைகளின் ஊடாக செயற்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இக்கட்டான காலப்பகுதியில் தேசிய இலக்குகளை அடைவதற்கு ஆளுநர்களின் பங்களிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தி வருவதாக ஜனாதிபதியின் செயலாளரின் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post