ஒரு மாதத்திற்கு முன்னர் குறுகிய கால பயண அனுமதிச்சீட்டில் சிங்கப்பூருக்கு சென்ற இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன்று (11) சிங்கப்பூரிலிருந்து வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ, இன்று சிங்கப்பூரை விட்டு வெளியேறியதை சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் அதிகார சபை (ICA) உறுதிப்படுத்துவதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷவின் குறுகிய கால பயண அனுமதி இன்று(11) காலாவதியாக இருந்தது. ஜூலை 14 ஆம் திகதி சிங்கப்பூர் வந்தபோது அவருக்கு முதலில் 14 நாள் பயண அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் இது ஆகஸ்ட் 11 வரை மேலும் 14 நாட்கள் நீடிக்கப்பட்டது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கையை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச, இ்ன்று தாய்லாந்து சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவருக்கு அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என்றும், தற்காலிகமாக மட்டுமே தங்கியிருப்பார் என்றும் தாய்லாந்து பிரதமர் முன்னதாக தெரிவித்தார்.
“இது ஒரு மனிதாபிமான பிரச்சினை மற்றும் இது ஒரு தற்காலிக தங்குமிடம் ஆகும்” என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
ராஜபக்சவின் தாய்லாந்து பயணத்தை தற்போதைய இலங்கை அரசாங்கம் ஆதரிப்பதாக கூறிய வெளியுறவு அமைச்சர் டான் பிரமுத்வினாய், முன்னாள் ஜனாதிபதி இராஜதந்திர கடவுச்சீட்டில் 90 நாட்கள் தங்க முடியும் என்றும் கூறினார்.
Discussion about this post