நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் நிலைமை காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாட்டுக்கு வருகை தருவது பொருத்தமான செயற்பாடாக அமையாது என்று பாதுகாப்புத் தரப்பு அரசுக்கு அறிவித்துள்ளது என்று உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறான தகவல் தமக்கும் கிடைக்கப்பெற்றது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பதற்கு வீசா அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த தினத்தில் அல்லது அதற்கு முன்னதாக அவர் நாட்டுக்கு வருகை தரவேண்டியுள்ள நிலையில் அது குறித்து தான் உறுதியாக அறிந்திருக்கவில்லை என்று குறித்த மொட்டு கட்சி உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் தற்போதைய நிலைமையின் கீழ் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாட்டுக்கு வருகை தருவது பொருத்தமான நடவடிக்கையாக அமையாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post