ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு இன்று மாலை அனுப்பிவைத்தார்.
சிங்கப்பூரில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாகவே குறித்த கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜுலை 09 ஆம் திகதி கொழும்பு உட்பட நாட்டில் பல பகுதிகளிலும் போராட்டம் வெடித்தது.
பெருந்திரளான மக்கள், கொழும்பு நோக்கி படையெடுத்து வந்ததால் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். ஜனாதிபதி மாளிகை, செலயகம் என்பன போராட்டக்காரர்கள் வசமானது.
இந்நிலையில் ஜுலை 13 ஆம் திகதி ஜனாதிபதி பதவி விலகுவார் என 09 ஆம் திகதி மாலை சபாநாயகர் அறிவித்தார். இதற்கிடையில் இலங்கையிலிருந்து நேற்று அதிகாலை மாலைதீவு தப்பியோடினார் ஜனாதிபதி கோட்டா. அங்கிருந்து இன்று சிங்கபூர் சென்ற பிறகே, அவ இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
அதன் சட்டப்பூர்வ தன்மை குறித்து சட்டாமா அதிபருடன் கலந்துரையாடி – உறுதிப்படுத்திய பின்னர், சபாநாயகரால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாளைய (15) தினத்துக்குள் சபாநாயகரின் அறிவிப்பு வெளியாகும் என சபாநாகர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அதேவேளை, சர்வக்கட்சி அரசமைப்பது தொடர்பிலும், பிரதமர் பதவி சம்பந்தமாகவும் விசேட கலந்துரையாடலொன்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உட்பட சுயாதீன அணிகளும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் டளஸ் அழகப்பெரும தலைமையிலான 16 பேர் கொண்ட அணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.
பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில், சர்வக்கட்சி அரசின் பிரதமரை பெயரிடுவதற்கு இதன்போது இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயரே முன்மொழியப்பட்டது.” என சந்திப்பில் பங்கேற்றிருந்த ரத்தன தேரர் குறிப்பிட்டார்.
எனினும், மேற்படி சந்திப்பில் பங்கேற்காத ஜே.வி.பி., ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுடன் கலந்துரையாடப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை முற்பகல் 10 மணிக்கு கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது பிரதமரின் பெயர் முன்வைக்கப்படும் என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரதமரை நியமிக்குமாறு பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு நேற்று அறிவித்திருந்தார். இதற்கமையவே இன்றைய சந்திப்பு இடம்பெற்றது.
இதற்கிடையில் பதில் ஜனாதிபதியாக செயற்படும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, மொட்டு கட்சியின் ஆதரவு இருப்பதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படலாம்.
Discussion about this post