பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் பழமைவாதக் கட்சிக்குள் அவருக்கு எதிராகப் பெரும் போர் வெடித்திருக்கிறது.
நிதி, சுகாதாரத் துறைகளுக்கான மூத்த அமைச்சர்கள் இருவர் நேற்று முன்தினம் பதவி விலகியதைத் தொடர்ந்து அடுத்தடுத்து மேலும் ஆறு கபினட் அமைச்சர்கள் உட்பட 42 எம். பிகள் ஜோன்சனின் அரசில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அதனால் அவரது அரசு பெரும் ஆட்டம் கண்டுள்ளது. இன்று மேலும் பலர் பொறுப்புகளில் இருந்து விலகுவர் என்று எதிரபார்க்கப்படுகிறது. இந்த நெருக்கடியால் – பிரதமர் பதவி விலகுவாரா? பொதுத் தேர்தலை அறிவிப்பாரா? அல்லது கட்சியினரை எதிர்த்துக் கொண்டே பதவியில் நீடிப்பாரா? இவ்வாறான கேள்விகள் லண்டன்அரசியல் களத்தைச் சூடுபிடிக்கச்செய்துள்ளன.
கட்சியில் இதுவரை ஜோன்சனை ஆதரித்து வந்தவர்கள் உட்பட நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்கள், அமைச்சர்கள் எனப் பெரும்பான்மையானவர்கள் அவரைப் பதவியில் இருந்து விலகுமாறு கேட்டிருக்கின்றனர்.
கட்சியின் விதிகள் அடுத்த ஓராண்டு காலத்துக்கு ஜோன்சன் தலைமைப் பதவியில் நீடித்திருப்பதைப் பாதுகாக்கின்றன. பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பு ஒன்றை எதிர்கொண்டு அதில் வென்றால் அடுத்த 12 மாத காலப்பகுதிக்குள் இரண்டாவது வாக்கெடுப்பை அவருக்கு எதிராக நடத்த முடியாது.
ஆனால் இந்த விதியைத் திருத்தி உடனடியாகவே அவர் மீது மற்றொருநம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்குக் கட்சியின் முக்கிய உயரமட்டங்கள் முயற்சித்து வருகின்றன.
ஒரே நாளில் 42 பேர் ஜோன்சனின் அரசிலிருந்து விலகி இருப்பது வரலாற்றில் இதற்கு முன்பு எந்த ஒரு பிரதமரும் தனது கட்சிக்குள் சந்தித்திருக்காத பெரும் அரசியல் நெருக்கடி என்று பிரிட்டிஷ் செய்தி ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
எனினும், அடுத்த சில மணிநேரத்துக்குள் பிரிட்டன் பிரதமர் முக்கிய முடிவை அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Discussion about this post