சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான நிறைவடைந்துள்ளன என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று விசேட உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த காலங்களில் நாட்டின் அபிவிருத்திக்காகவே நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசினோம். ஆனால் இம்முறை அவ்வாறு இல்லை.
வங்குரோத்து நிலையை அடைந்துள்ள நாட்டை மீட்பது தொடர்பாகவே நாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். கடன் மீளமைப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை என்பவற்றை சர்வதேச நாணய நிதியத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்னரே சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் திட்டத்துக்குச் செல்ல முடியும்.
பல்வேறு கட்டங்களின் கீழ் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் பல்வேறு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. பொருளாதார மீளமைப்புக்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்போது நாடு எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் போரால் எமக்கு மட்டுமல்ல உலக நாடுகள் பலவும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
எதிர்காலத்தில் ரூபாவின் பெறுமதியை வலுவடையச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பணம் அச்சிடுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
2023 ஆம் ஆண்டு நாடு பெரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். 2023 ஆம் ஆண்டு பல சந்தர்ப்பங்களில் கட்டுப்பாடுகளுடன் பணத்தை அச்சிட வேண்டியிருக்கும். 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் பணம் அச்சிடுவதை முழுமையாக நிறுத்த வேண்டும்.
நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்மறை 4 மற்றும் எதிர்மறை 5 இடையே உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் புள்ளிவிவரங்களின்படி எதிர்மறை 6 மற்றும் எதிர்மறை 7 இடையே உள்ளது.
இது ஒரு தீவிரமான நிலைமை. உறுதியான பயணத்தை மேற்கொண்டால் 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் நேர்மறையான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்ட முடியும்.- என்றார்.
Discussion about this post