கவிஞர் நாவலாசிரியர் தீபச்செல்வன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர போராட்டம் ஒன்றில் கலந்துகொண்ட போது பொலிசார் அதனை தடுக்க முற்பட்ட நிகழ்வு ஒன்று தென்னிலங்கையில் இடம்பெற்றது. இதன் போது ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மார்பகங்கள் வெளித் தெரிந்த புகைப்படம் ஒன்று ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இந்தப் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசித்து மகிழும் தென்னிலங்கைவாசிகளின் மகிழ்வுதான் இன்றைய நாட்களில் பெரும் பேசுபொருளாக இருக்கிறது.
தமிழ்ச் சூழலில் இந்த குரூர ரசனைக்கு எதிராக மிகவும் பலமான விமர்சனங்களும் கண்டனங்களும் முன் வைக்கப்படுகின்றன. எப்போதுமே ஈழத்தில் மாத்திரமின்றி தென்னிலங்கையிலும் எழுகின்ற இத்தகைய பிரச்சினைகளின் போது தமிழர்கள் மனசாட்சியுடன் குரல் கொடுத்தே வந்திருக்கிறார்கள். அதேபோன்றுதான் இப்போது ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்காகவும் வடக்கு கிழக்கு குரல் கொடுக்கிறது. ஆனால் தென்னிலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் இப்படி பாலியல் வெறி கொண்டு நிற்பது குறித்து சிங்கள மக்களும் முற்போக்கு சக்திகளும் நன்கு சிந்திக்க வேண்டும்.
உண்மையில் பௌவுத்த சிங்களப் பேரினவாதம் எப்போது நிர்வாணத்தை குரூரமாக ருசிக்கின்றது. ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக நிர்வாணப்படுத்தல் என்கின்ற ஆயுதத்தை இனத்தை அசிங்கப்படுத்தவும் அவமானமுறச் செய்யவும் தொடர்ச்சியாக பயன்படுத்துகிறது. சிலவேளைகளில் சிங்கள மக்களுக்கு எதிராகவும் இதே வழிமுறை திருப்பப்படுகிறது. அப்படி ஒரு நிகழ்வுதான் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கும் நடந்திருக்கிறது.
1983இல் ஜூலை இனப்படுகொலை நடைபெற்ற சமயத்தில் ஈழத் தமிழர் ஒருவர் நிர்வாணமாக இருதப்பட்ட புகைப்படம் அப்படுகொலையின் பெரு வடுவை இன்றும் நினைவூட்கிறது. நிர்வாணப்படுத்தப்பட்ட அந்த ஈழத் தமிழர் கூனிக் குறுகி, கண்களைப் பொத்திக் கொண்டு அழுகின்ற காட்சி வரலாறு முழுவதும் ஈழத் தமிழ் மக்களை பெரும் துயரத்திற்கு உட்படுத்துகிறது. இதற்கு முன்பாக மக்கள் விடுதலை முன்னணியின் பெண் போராளி சிங்களப் பெண் மன்னம்பேரி கைது செய்யப்பட்டு கொண்டுவரப்படுகையில் நிர்வாணமாக வீதியால் கொண்டுவரப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அப்போதும் அதனை ஈழத் தமிழ் சமூகம் எதிர்த்தது.
அதேபோன்று ஈழப் போர் நடைபெற்ற சமயங்களில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட சிங்கள இராணுவத்தினரின் சடலங்கள் உரிய இராணுவ மரியாதைப் படி கையளிக்கப்பட்டன. ஆனால் சில சமயங்களில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் வித்துடலங்களைக் கைப்பற்றிய போது அவற்றையும்கூட மிக மோசமான பழிவாங்கின. பிணங்களைக்கூட புணர்கின்ற பாலியல் இனவெறி வக்கிரத்தை ஸ்ரீலங்கா இராணுவம் தாராளமாக வளர்த்து வைத்திருக்கிறது.
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் ஈழத் தமிழ் மக்கள் சரணடைந்த போது நிர்வாணமாகவே சரணடைய வேண்டும் என்ற நிபந்தனையை சிங்கள இராணுவம் விதித்தது. பாதுகாப்பு காணரம் என்று சொல்லப்பட்டு தந்தை, தாய், மகள், மகன் என்று அனைவரும் நிர்வாணமாக சரணடைய வைக்கப்பட்டமை ஒரு இனம் சந்தித்த மறக்க முடியாத அவமானம் ஆகும். அப்படி சரணடைந்தவர்களைப் பார்த்து குரூரமாக பௌத்த சிங்கள இராணுவ ரசித்தது.
போரின் இறுதியில் தோற்றுப் போனதாக கருதப்பட்ட ஒரு இனம் சந்தித்த நிர்வாணம் என்பது இன்னொரு யுத்தமாகும். போரில் கொல்லப்பட்டவர்களின் இழப்பு ஒரு புறத்தில் வருத்த, உயிருடன் சரணடைந்தவர்களை கொல்லுகிற இன்னொரு அணுகுமுறை இதுவாகும். நிர்வாணம் என்பது அந்தரங்கமானது. பௌத்த சமயத்தில் மகா நிர்வாணம் என்ற சித்தாந்தத்தை புத்தர் போதிக்கிறார். அமைதி வழியையும் ஞானத்தையும் போதிக்கின்ற புத்தரை பின்பற்றுவதாக சொல்லுகின்ற பௌத்த சிங்களப் பேரினவாதம் நிர்வாணத்தை ரசிக்கின்றது என்பதே சிங்களப் பேரினவாத்தின் உண்மை முகமாகும்.
ஒருமுறை தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயயலிதா ஜெயராம் அவர்கள், இலங்கை அரசின் ஈழ இனப்படுகொலைக்கு எதிராகவும் ஈழ மக்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசுக்கு பொருளாதார தடைவிதிக்க வேண்டும் என்று கூறிய சமயத்தில் சிங்கள ஊடகம் என்று அவரை மிக மோசமாக அருவருக்கத்தக்க முறையில் கேலிச்சித்திரம் ஒன்றை பிரசுரித்திருந்தது. சில சிங்கள ஊடகங்கள் கூட இத்தகைய குரூர மனப்பாங்ககைத்தான் வளர்க்கின்றது.
அண்மையில் இலங்கை ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதருக்கு எதிராக கொழும்பில் போராட்டம் நடைபெற்றது. இலங்கைக்கு அரசுக்கு எதிராக புரட்சி செய்யக் கூடிய தரப்பினர்கூட தாம் கைப்பற்றிய மகிந்த ராஜபக்வின் ஆதரவாளர்களை நிர்வாணப்படுத்தியிருந்தனர். மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்தை நாம் ஆதரிக்கின்ற அதேநேரத்தில், இத்தகைய அணுகுமுறைகளை யார் செய்தாலும் அதனை நாம் ஆதரிக்கப்ப போவதில்லை. ஏனெனில் நிர்வாணத்தை சிங்களப் பேரினவாதம் எப்படி எம் இனத்தின் மீது ஒரு ஆயுதமாக பிரயோகிக்கிறது என்பது நமக்கு துயரமான வரலாறு.
அதேபோன்று இறுதிப் போரில் சரணடைந்த போராளிகளும் நிர்வாணப்படுத்தப்பட்டனர். ஆண்போராளிகளும் பெண் போராளிகளும் நிர்வாணப்படுத்தி சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆண் போராளிகள் நிர்வாணப்படுத்தபட்டு பின்பக்கமாக பிடரிகளில் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகளை எந்த தமிழரும் மறந்துவிட மாட்டார்கள். இசைப்பிரியா உள்ளிட்ட பெண் போராளிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்டமை ஒவ்வொரு ஈழத் தமிழரையும் உறுத்திக் கொண்டிருக்கும் கொடுமையாகும்.
இன்று ஹிருணிகா பிரேமச்சந்திர அவர்கள் ஒரு தன்னிலை விளக்கத்தை அளித்திருக்கிறார். மூன்று அழகிய பிள்ளைகளின் தாயாகவும் கிண்டலுக்கு உள்ளான தன் மார்பகங்களின் தாய்மைப் புனிதம் குறித்தும் ஒவ்வொரு மனிதனுக்கும் தாயிடம் குடித்த பாலைக் குறித்தும் குற்ற உணர்வை தட்டி எழுப்பும் வகையில் தன் கருத்தை பகிர்ந்திருக்கிறார். உண்மையில் நாம் ஹிருணிகா பிரேமச்சந்திர அவர்களுக்கு பெரும் ஆதரவை அளிக்கிறோம். அவரின் தாய்மைப் போராட்டத்தில் எங்கள் குரல் கலந்தே இருக்கும்.
ஈழத் தமிழ் பெண்களுக்கு நடந்த ஒவ்வொரு அநீதிகளும் சிங்களப் பெண்பளுக்கும் நடக்கும் என்பதை நாம் எச்சரித்தே வந்தோம். எனவே திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர அவர்களே, இசைப்பிரியா, கிரிசாந்தி, கோணேஸ்வரி என்று எங்கள் மண்ணில் நிர்வாணத்தாலும் பாலியல் வன்புணர்வுக் குரூரத்தாலும் அழிக்கப்பட்ட ஆயிரம் ஆயிரம் சகோதரிகளுக்காகவும் நீங்கள் குரல் கொடுக்க வேண்டும். சிங்களப் பேரினவாத சமூகத்தில் ஆழ அகல வேர் கொண்டிருக்கும் இந்த குரூரம் மனித சமூகத்திற்கே தீங்கானது என்று உங்கள் குரல் பேச வேண்டும்.
Discussion about this post