ஓகஸ்ட் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 200 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, இந்திய உதவி திட்டத்தின் கீழ் 4 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி மற்றும் 500 மெட்ரிக் தொன் பால் மா என்பன கிடைக்கவுள்ளன.
இந்த நிவாரணப் பொருள்களை கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினருக்கு எதிர்காலத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
எரிவாயுப் பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்காக, ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயு கொள்வனவு செய்யப்பட உள்ளது.
இதற்காக உலக வங்கியின் 70 மில்லியன் டொலரும், சிறிலங்கா அரசாங்கத்தின் 20 மில்லியன் டொலர் நிதியும் பயன்படுத்தப்பட உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
Discussion about this post