யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட , நகரின் மையப்பகுதியில் உள்ள பல்வேறு வீதிகளில் சைக்கிள் உள்ளிட்ட எந்தவொரு வாகனத்தை தரித்தால், அதற்கு வாகனத் தரிப்புக் கட்டணம் கடந்த சிலநாள்களாக அறவிடப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் மக்கள் அந்தரிக்கும் நிலையில், எவ்வித முன்னறிப்புமின்றி மாநகரசபை மேற்கொண்டுள்ள இந்த வசூலிப்பால் பொதுமக்களிடையே பெரும் விசனநிலை தோன்றியுள்ளது.
யாழ்ப்பாணம் மருத்துவமனை வீதி உட்படப் சில வீதிகளில் இவ்வாறு கடந்த சில நாள்களாக வாகனத் தரிப்புக் கட்டணம் அறவிடப்படுகின்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பொருள்களுக்கும், மருந்து வகைகளுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்,அவற்றைப் பெற்றுக்கொள்ள பலரும் யாழ்.நகரப்பகுதி நோக்கியே படையெடுக்கின்றனர்.
இந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்புமின்றி மாநகரசபை வீதியோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கூட கட்டணம் அறிவிடத் தொடங்கியுள்ளது.
மாநகரசபை ஆரம்பிக்கப்பட்டு இதுவரை இப்படி வீதியோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் தினமும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நகர்ப் பகுதிக்கு வரவேண்டியுள்ள நிலையில், அல்லது வேறு வேறு வீதிகளைப் பயன்படுத்த வேண்டியுள்ள சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு முறையும் வாகனத் தரிப்புக் கட்டணத்தைச் செலுத்த நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள் என்றும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இந்த நடைமுறை தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர சபை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பையும் விடுக்காத நிலையில், வாகனத் தரிப்புக் கட்டணத்தை அறவிடுவோர் மக்களுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றனர் என்றும், பலமுறை கட்டணத்தைச் செலுத்துவதற்கு நிர்ப்பந்திக்கின்றனர் என்றும் பொதுக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தற்போது மக்கள் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நகர்த்துவதற்கு வழி தெரியாது தவிக்கும் நிலைமையில், யாழ்ப்பாணம் மாநகர சபை தங்கள் வருமானத்தைப் பெருக்குவதற்காக இந்த நடைமுறையைக் கொண்டு வந்துள்ளமை மனிதாபிமானமற்ற செயற்பாடு என்றும் – மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல் என்றும் மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post