டீசல், பெற்றோல் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளாந்தம் கொழும்புக்கு வரும் கார்கள், வான்கள், பஸ்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை 50 வீதத்துக்கும் மேல் குறைந்துள்ளது.
தனியார் வாகனங்களில் வந்த பலர் தற்போது பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.
வழக்கமாக நாளாந்தம் 5 லட்சம் வாகனங்கள் கொழும்பை வந்தடைவதுடன் கொழும்பு நகரில் கடும் வாகன நெரிசலுமு் காணப்படும். தற்போது கொழும்பில் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால், டீசல் தட்டுப்பாடு காரணமாக, பொதுப் போக்குவரத்து பஸ்களின் பற்றாக்குறையால், அலுவலக நேரம் மற்றும் பாடசாலை நேரங்களுக்கு பயணிப்பதில் பயணிகள் கடும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.
கொரோனாப் பரவலின் பின்னர் சுமார் 18 ஆயிரம் தொடக்கம் 13 ஆயிரம் வரையான தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ள போதிலும், தற்போது 5 ஆயிரத்துக்கும் குறைவான பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களின் எண்ணிக்கையும் 25 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது என்று சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சபையில் சுமார் ஆயிரத்து 400 பஸ்கள் இயக்கப்பட்டாலும், தற்போது 900 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
இதேவேளை சன நெரிசலால் அனைத்து அலுவலக ரயில்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறையால் 150க்கும் மேற்பட்ட ரயில்கள் தடம் புரண்டுள்ளன என்று ரயில்வே திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post