யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் கொலைச் சம்பவம் தொடர்பில் எதிரிகள் இருவருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு மாசி மாதம் 3ம் திகதி இரவு கொழும்புத்துறையைச் சேர்ந்த கடற்தொழிலாளியான மார்க்கண்டு சிவராசா என்பவர் தனது வீட்டுக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
சடலத்தில் காயங்கள் காணப்பட்ட நிலையில் புலன் விசாரணை நடத்திய யாழ்ப்பாண குற்றப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் இறந்தவரின் மனைவியையும், சக கடற்தொழிலாளியான நண்பர் ஒருவரையும் கைது செய்தனர்.
இறந்தவரின் வீட்டின் பின்புறத்தில் இருந்து கொலைக்கு உபயோகிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட கத்தி, மண்வெட்டி என்பன கைப்பற்றப்பட்டன.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நடைபெற்ற சுருக்கமுறையற்ற விசாரணையின் பின் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு வழக்கு பாரப்படுத்தப்பட்டது.
யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ. விஸ்வநாதன் முன்னிலையில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு, இரண்டு எதிரிகளுக்கும் எதிரான கொலைக் குற்றச்சாட்டு அரச தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பு வழங்கப்பட்டதுடன், இருவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை ஆட்சேபித்து எதிரிகளான கமலநாதன் கங்காதரன், சிவராசா சுமதி ஆகிய இருவரும், தமது சட்டத்தரணிகள் எஸ். சிவநேசன், பி. தவபாலன் ஆகியோர் மூலம் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.
மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் பந்துல கருணாரத்ன, ஜீ. குருசிங்க ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மேன்முறையீடுகளை ஆதரித்து, சட்டத்தரணி எஸ். பஞ்சாட்சரத்தின் அனுசரணையுடன் மூத்த சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா வாதாடினார்.
இருதரப்பு வாதங்களின் பின்னர் தீர்ப்பு வழங்கிய மேன்முறையீட்டு நிதியரசர்கள், அரச தரப்பு சாட்சியத்தில் சில முக்கியமான விடயங்களில் காணப்படும் திட்டவட்டமான முரண்பாடுகளை புறம்தள்ள முடியாது எனத் தெரிவித்து மேல் நீதிமன்றம் வழங்கிய குற்றத்தீர்ப்பையும் தூக்குத் தண்டனையையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.
Discussion about this post