மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு இம்மாத இறுதிக்குள் உரம் கிடைக்கும் என்பதை விவசாய அமைச்சரோடு இடம்பெற்ற சந்திப்பில் உறுதியளிக்கப்பட்டதாக அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் எஸ். யோகவேள் தெரிவித்தார்.
அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் மாவட்டத் தலைவர்களுக்கும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் இடையிலான சந்திப்பு விவசாய அமைச்சில் இடம்பெற்றது.
அமைச்சருக்கும் விவசாயிகளுக்குமிடையிலான இச்சந்திப்பு அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசியத் தலைவர் எச். சமரகோன் தலைமையில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் சமகாலத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி குறிப்பாக இரசாயன உர விநியோகம் பற்றிக் கலந்தாலோசிக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து வந்தடையவுள்ள உரத்தில் அதன் முதலாவது விநியோகத்திலேயே 65 மெற்றிக் தொன் உரத்தை மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க அமைச்சர் ஒப்புக் கொண்டதாக அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் யோகவேள் தெரிவித்தார்.
இதுபற்றி மேலும் தெரிவித்த யோகவேள், இந்தியாவிலிருந்து வெகு விரைவில் இலங்கை வந்தடையவுள்ள உரம் அதன் விலை ஒரு மூடை 10 ஆயிரம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் எதிர்வரும் 25 ஆம் திகதி உர விநியோகம் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கடந்த போகத்தின்போது உர விநியோகம் கிடைக்கப்பெறாததால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு ஜுன் மாத இறுதிக்குள் இழப்பீடு கிடைக்கும்.
அதேபோன்று இயற்கைப் பசளை உற்பத்தி செய்தவர்களுக்குரிய கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளதமாகவும் அமைச்சருடனான சந்திப்பில் தகவல் தெரவிக்கப்பட்டது.
எனினும் களை நாசினி பெற்றுக் கொள்வதற்கான எந்தவித வழிகளும் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் யோகவேள் மேலும் தெரிவித்தார்.
Discussion about this post